சண்டேன்னா மூணு! TN காங்கிரஸ்! (ஈவெ)ராமசாமி! விவாதங்கள்!

தமிழ்நாடு காங்கிரஸ் இருக்கிறதே, அது எதிலும் சேர்த்தியில்லாத ஒரு வினோதமான ரகம்! சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று வைதாலும் பொறுத்துக் கொள்வார்கள், ஆனால் அடுத்தகட்சியின் தோளேறி சவாரி செய்ய வாய்ப்புக் கிடைத்தால் போதும் என்ற பரந்த சுயநலம் கொண்டவர்கள்! இந்தக் கிறுக்கு மாய்க்கான்களை நம்பி தமிழ்நாட்டில் வாக்களிக்கவும் ஒரு சிறுபகுதி மக்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப்பெரிய வினோதம்!அப்படி வாக்களிக்கிறவர்கள் எவ்வளவு பேர் என்பதுதான் திமுகவின் துரைமுருகன் ஆரம்பித்து வைத்திருக்கிற விவாதம். விவாதத்தைத் தொடர விடாமல் கஃங்கிரசின் கே எஸ் அழகிரி, திமுக தலைவர் இசுடாலினை சந்தித்து, பிரச்சினையை முடித்து வைக்க முயற்சி செய்திருக்கிறார். இந்தப் பின்னணியில் தந்திடிவியின் நேற்றைய கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் கே எஸ் அழகிரி ஹரிஹரனோடு உரையாடியது எப்படி இருந்ததாம்?


இதை ஒரேவார்த்தையில் விமரிசிக்க  வேண்டுமானால், சமாளிக்க முயன்றும், சொதப்பல் என்று முடித்து விடலாம்! ஆனால் தமிழக அரசியல் களம் இதுமாதிரி அடிக்கடி நிகழும் உரசல்கள், சொதப்பல்கள், நீயாநானா  விவாதங்களைத் தாண்டியும், மெகா சீரியல் மாதிரிப் போய்க்கொண்டே இருப்பது என்பது புரிந்தவர்கள் மகான் வடிவேலு படக் காமெடியில் பொருத்தமான ஒன்றை நினைவுபடுத்திக் கொண்டு, சிரித்துக் கொண்டே கடந்து விடுவார்கள். திமுக மாதிரி ஒரு கட்சியின் துணை இல்லாமல் தனித்தே தேர்தலை எதிர்கொள்கிற தைரியம் கட்சித் தலைவர்கள், பிரமுகர்களுக்கு இல்லை. இது தொடர்பான கேள்வியைக் கூட, ஒரு மழுப்பலான பதில் சொல்லி முடித்துவிடுகிறார். திமுகவின் நிலையும் கூட கூட்டணி இல்லாமல் தேர்தலை இதுவரை சந்தித்ததே இல்லை என்பதுதான்! ஆனால் திமுகவின் பலமே, துரை முருகன் மாதிரி உதார் விடத்தெரிந்தவர்கள் தான் என்பது புரிகிறதா?  இந்த 40 நிமிட விவாதத்தில் என்ன கேள்வி? என்ன பதில்?  விடை தெரிந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்! இதைவிடக் கொஞ்சம் காரசாரமான விவாதம் இங்கே 55mts 


இங்கே தமிழக அரசியல் களம் திராவிட கட்சிகளை மையமாக வைத்தே இருப்பதான பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருப்பதில், மிகவும் வேடிக்கையான விஷயம் ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா? அந்தக் கழகம் அல்லது இந்தக் கழகத்தோடு கூட்டணி வைத்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கும் தேசியக் கட்சிகள் என்று அறியப்படும் காங்கிரஸ், இடதுசாரிகள், பிஜேபி இப்படி எல்லாவற்றிலும் இந்தக்கழகத்தோடு கூட்டு வைத்திருக்கும்போது, கட்சிக்குள்ளேயே அந்தக் கழகத்துக்கு ஆதரவாக இருப்பது, பேசுவது, குழப்புவது என்றிருப்பதைக் கவனித்திருக்கிறீர்களா? அப்படிக் கவனித்திருந்தால், மதன் ரவிச்சந்திரன் இந்த வினோதத்தை அறியாமல்  எதற்காக 31 நிமிடம் ராமசுப்ரமணியத்தோடு விவாதிக்கிறார் என்று சிரித்தே கடந்து போய்விடுவீர்கள்! 

ஆனால், இந்த விவாதம் தாண்டி எனக்கு மிக வினோதமாகத் தெரிவது, இங்கே மார்க்சீயத்தை ஏற்றுக் கொண்டதாகச் சொல்லிக்கொள்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளில் \ இருப்பவர்களே கூட மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் இவர்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஈவெ.ராமசாமியைத் தூக்கிப் பிடிக்கும் அளவுக்குப் போவிட்டதுதான்! திமுக உள்ளிட்ட கழகங்களுக்கு ஒரு அடையாளம் தேவைப்பட்டதில் ஈவெ ராமசாமி பெரியாராகக் கட்டமைக்கப்பட்டார். ஈவெராமசாமி எந்த ஒருவிஷயத்திலும் ஒரு தெளிவான தீர்வைக் கண்டு சொன்னதில்லை. குழப்பங்களின் மொத்த உருவமாகவே தெரிகிற  ஈவெ.ராமசாமி அப்படியென்ன சமூகப்புரட்சி செய்துவிட்டார்? சாதிகள் ஒழிந்து விட்டதா? என்ன பெரிய தத்துவம், சாதனை செய்துவிட்டார்   என்பதற்காக இடதுகள் இப்படித் தூக்கிக் கொண்டாடுகிறார்கள்? இடதுசாரிகள் சீரழிந்ததற்கு, இந்தமாதிரி கலப்படம் நிகழாமல் தத்துவார்த்தப் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வழிகாட்டிவந்த EMS நம்பூதிரிபாட் மாதிரி இன்னொருவர்  கம்யூனிஸ்ட் கட்சியில் உருவாகாமல் போனதுதான் காரணமோ  என்ற கேள்வி எனக்குள் உரக்க எழுகிறது. 

இந்த இரு விவாதங்களைத் தொடர்ந்து  எழுகிற சில முக்கியமான கேள்விகள்:

1. காங்கிரசின் ஆயுள் முடிந்து விட்டது. ஒரு சரியான மாற்று அரசியலை முன்னெடுக்க முடியாமல் ஒரு குடும்பத்தை முன்வைத்தே அரசியல் செய்கிறவர்களைக் குறித்து ராமச்சந்திர குகா வெள்ளிக்கிழமை கோழிக்கோட்டில் நாக்கைத் பிடுங்கிக்கொள்கிறமாதிரிக் கேட்டுவிட்டார்! யாரை? ராகுல் காண்டியைத் தேர்ந்தெடுத்த கேரள மக்களுக்கு மட்டுமல்ல, காங்கிரசை இன்னமும் ஆதரிக்கும் மனோநிலை கொண்டவர்கள் எல்லோருக்கும்தான்! காங்கிரசுக்கு பதிலாக தேசிய அளவில் யாரை மக்கள் முடிவு செய்யவேண்டும்? 

(அப்படி ஒரு தெளிவில்லாததால் தான் இன்னமும் மாநிலக் கட்சிகள் உயிர்ப்போடு இருக்கின்றன என்பது சேர்த்துப்பார்க்கவேண்டிய விஷயம்)

2. வலதுசாரி பிஜேபிக்கு எதிராக ஒரு வலுவான இடது சாரி இயக்கம் வேண்டும் என்று முந்தைய நாட்களில் குரல் கொடுத்த ராமச்சந்திர குகாவே, கேரளாவில் நேற்று முன்தினம் இடதுசாரிகளைக் குறித்து கடும் விமரிசனத்தை முன்வைத்திருக்கிறார். இடதுசாரிகள் ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்கத் தவறிவிட்டார்களா? 

(வலதுசாரிகளுக்கு எதிராக இன்னொரு வலதுசாரி அமைப்பு உருவாகக்  கூடாதா? குறிப்பாக இங்கே இடதுசாரிகள் தங்கள் சுயத்தை இழந்து, குறுகிப் போய்க் கிடக்கையில் இடதுசாரிகளால் ஒரு மாற்று அரசியல் முன்னெடுக்க முடியாது என்ற பின்னணியில் சேர்த்துப் பார்க்க வேண்டிய விஷயம்)     

மீண்டும் சந்திப்போம்.                    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!