மண்டேன்னா ஒண்ணு! என்னன்னு சொல்லி ஆரம்பிக்க?

இங்கே சேனல்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங் வந்து போன விஷயத்தை அப்போதே மறந்துவிட்டு வழக்கமான அக்கப் போர்களில் திரும்பவும் இறங்கி விட்டார்கள் என்பதைக்  கொஞ்சம் சுவாசிக்கப்போறேங்க தளத்தில் நேற்றைக்கு சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அப்படி என்னென்ன பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன? இதற்குள் பாகிஸ்தான் வேறு எப்படிப் புகுந்து கொண்டிருக்கிறதாம்?

   
இந்தப் பிரச்சினைகள் குறித்துத் தமிழில் தெளிவாக, சுருக்கமாக முகநூலில் ஒரு பகிர்வைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். படித்ததில் பிடித்தது என அது இங்கேயும். புரிந்துகொள்ள உதவியாக மேலே உள்ள வரைபடத்தையும் பார்த்துக் கொண்டே வாசிக்கலாம்!

இந்திய-சீன உறவுச் சிக்கலுக்கு அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைச் சொல்லலாம்.
ஒன்று, இந்தியாவின் திபெத்திய ஆதரவு. தலாய்லாமா இந்தியாவில் இருந்து கொண்டு திபெத்திய விடுதலைக்காகப் போராடுவதனை சீனர்கள் முற்றிலும் விரும்பவில்லை.
இரண்டு, இந்திய-சீனப் போரின்போது சீனா பிடித்துக் கொண்ட இந்தியப் பகுதியான, இன்றைக்கு அக்சாய்-சென் என்றழைக்கப்படுகிற பகுதி குறித்தான சர்ச்சை. இந்தியா இன்றைக்கும் அந்தப் பகுதியை தன்னுடையதாக உரிமை கொண்டாடுகிறது.
மூன்று, சட்ட விரோதமாக இந்தியாவின் பகுதியான கில்கிட்-பால்டிஸ்தானை ஆக்கிரமித்துள்ள பாகிஸ்தான், சீனாவுக்கு இலவசமாகக் கொடுத்த பகுதிகள்.
நான்கு, இந்தியாவின் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்தப் பகுதி தங்களுடையதென்று தொடர்ந்து வலியுறுத்துவதால் உண்டாகும் மோதல்கள்.
ஐந்து, சீனாவின் பாகிஸ்தானிய ஆதரவு மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் பிரச்சினை. CPEC தொடர்ப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் இந்தியப் பகுதியான (இன்றைக்குப் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள) கில்கிட்-பால்டிஸ்தான் வழியாகச் செல்வதால் உண்டான இந்திய எதிர்ப்பு.
ஆறு, சீனாவிற்குப் போட்டியாக அமைந்த இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம். அதனை எப்பாடுபட்டேனும் தடுக்க நினைக்கும் சீனாவின் முயற்சிகள் மற்றும் அதற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் இன்றைக்கு இந்தியா எடுக்கும் தீர்மானமான நடவடிக்கைகள்.
முதலாவது பிரச்சினை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது என்றே எண்ணுகிறேன். இனிமேலும் திபெத் சீனாவிடமிருந்து விடுதலை பெறும் என்பது வெற்றுக் கனவுதான். அந்த அளவிற்குச் சீனா திபெத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்கிறது. பெருமளவு ஹான் சீனர்களை திபெத்திற்குள் குடியமர்த்தி, திபெத்திய கலாச்சாரத்தை ஏறக்குறைய சீனா அழித்துவிட்டது. கால மாற்றங்களை உணர்ந்த பா.ஜ.க. அரசாங்கம் தலாய்லாமாவைக் குறித்து அதிகம் பொருட்படுத்திக் கொள்வதில்லை. எனவே சீனர்கள் அந்த விஷயத்தைக் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை.
இரண்டாவது பிரச்சினையான அக்சாய்-சென் குறித்து சீனர்கள் கவலை கொள்ள அதிக முகாந்திரம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னபடி அந்தப் பகுதி இந்தியா உரிமை கொண்டாடும் கில்கிட்-பால்டிஸ்தானின் ஒருபகுதி. அந்தப் பகுதி வழியாகத்தான் சீனா திபெத்திற்குச் செல்ல பல முக்கியமான சாலைகளையும், ரயில்பாதைகளையும் அமைத்திருக்கிறது. சமீபத்தில் இந்தியா காஷ்மீரில் ஆர்ட்டிகிள் 370-ஐ நீக்கி, லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது சீனாவுக்குச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறது. இந்தியா அந்தப் பகுதிகளைக் கைப்பற்றினால் சீனா திபெத்தை இழக்க நேரிடும்.
மூன்றாவது பிரச்சினை சிக்கலானது. இந்தியா விடுதலை பெற்றபோது காஷ்மீரின் ஒருபகுதியாக இருந்த கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியும் இந்தியாவுடன் இணைய சம்மதித்துக் காஷ்மீர் மஹாராஜாவினால் கையொப்பமும் இடப்பட்டது. ஆனால் அங்கு பாதுகாப்பில் இருந்த பிரிட்டிஷ்காரனான மேஜர் வில்லியம் பிரவுன் என்பவன் அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்த்துப் புரட்சி செய்தான். அவனுக்குப் பாதுகாப்பாக இருந்த பல ஹிந்து ராணுவத்தினரையும், கூர்க்காக்களையும் படுகொலை செய்த வில்லியம் பிரவுன் பின்னர் அந்தப் பகுதிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைத்தான். நேரு அதனைக் குறித்து எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம்போல வாயை மூடிக்கொண்டிருந்தார். ஆனால் இன்றைக்கும் கில்கிட்-பால்டிஸ்தான் சட்டப்படி இந்தியாவிற்குச் சொந்தமானது.
இந்தியா என்றைக்கு வேண்டுமானாலும் கில்கிட்-பால்டிஸ்தானை சட்டப்படி திருப்பியெடுத்துக் கொள்ளும் என்று உணர்ந்த பாகிஸ்தானிய ஜெனரல்கள் மிகுந்த தந்திரத்துடன் கில்கிட்-பால்டிஸ்தானின் கிழக்குப் பகுதியை சீனாவிற்கு இலவசமாகக் கொடுத்துச் சீனாவுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி கில்கிட்-பால்டிஸ்தான் பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாகவும் அதனை சீனாவுக்கு சட்டப்படி விட்டுக் கொடுத்ததாகவும் ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. எனவே இந்தியா கில்கிட்-பால்டிஸ்தன் மீது உரிமை கொண்டாடி படையெடுத்தால் அது சீனாவையும் பாதிக்கும் என்பதால் சீனாவும் பாகிஸ்தானுடன் சேர்ந்து சண்டையிட ஏதுவாகும். எனவே இந்தியாவால் ஒன்றும் செய்ய இயலாத நிலை உண்டாகும்.
நான்காவது பிரச்சினையான அருணாச்சலப் பிரதேசம் சீனாவைப் பொறுத்தவரை அத்தனை எளிதானதல்ல. ஏனென்றால் 1960-களில் இருந்த இந்தியா இன்றைக்கு இல்லை. இந்திய ராணுவம் மிக வலிமையானதாக ஆகியிருக்கிறது. எனவே அந்தப் பிரச்சினை அவ்வப்போது வரும், போகும் என்பதனைத் தவிர்த்து பெரிதாக வாய்ப்பில்லை.
ஐந்தாவது பிரச்சினை இடியாப்பச் சிக்கலானது. இரண்டாவது, மூன்றாவது பிரச்சினைகளுடன் இணைந்தது. இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்க பாகிஸ்தான் கில்கிட்-பால்டிஸ்தானுக்குள் இருக்கும் பெரும் பகுதியை அதாவது சீபெக் (CPEC) சாலைகள் செல்லும் வழியிலுள்ள பகுதிகளை சீனாவுக்கு விட்டுக் கொடுத்திருப்பதாக வரும் தகவல்கள். அது உண்மையாக இருந்தால் இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கக் கூடிய தலைவலி அது. சீனா அங்கு ஒரு பெரும் ராணுவத் தளத்தையும் அமைக்க இருக்கிறது. அது நடந்தால் ஏறக்குறைய கில்கிட்-பால்டிஸ்தான் இந்தியாவின் கையைவிட்டுப் போய்விட்டதாக அர்த்தம்.
ஆறாவது பிரச்சினையான இந்திய-சீனப் பொருளாதார யுத்தம். சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை. பாகிஸ்தானியர்கள் மூலமாக பிரச்சினைகளை உருவாக்க முயல்வார்கள் என்பதுடன் மட்டுமே அவர்களின் நடவடிக்கைகள் நின்று போகும். அந்த அளவிற்கு உலக நாடுகளின் எதிர்ப்பைச் சம்பாதித்து வைத்திருக்கிறது சீனா.
சீனப் பொருளாதாரம் இறங்கு முகத்தில் இருக்கிறது. இனிவரும் காலம் இந்தியாவின் காலம் என்பதில் சந்தேகமில்லை. 

இந்தப் பகிர்வு ஒரு எளிமையான புரிதலுக்காக  மட்டுமே என்ற எச்சரிக்கைக் குறிப்போடு இதைப் பரிந்துரைக்கிறேன். எல்லைப்  பிரச்சினை அல்லாத வேறு 5 பிரச்சினைகள் இந்திய சீன உறவுகளில் மிக உறுத்தலாக இருக்கின்றன.

1. இந்தியா ஐநா பாதுகாப்புசபை கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு சீனா தொடர்ந்து போட்டுவரும் முட்டுக் கட்டை! அதேபோல Nuclear Supplier’s Group (NSG). உறுப்பினராவதற்கும் தடைபோட்டு வருவது.

2.  சீனாவின் ஒரேபெல்ட் ஒரேரோடு திட்டத்தில் சேர இந்தியா மறுத்துவருவது. CPECயின் சாலைகள் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் வழியாக அமைவதை இந்தியா எதிர்த்து வருவது. (இந்தியா இதற்கு மாற்றாக வேறொரு பாதையைச் சொல்வதை சீனா காதுகொடுத்துக் கேட்கிற மாதிரித் தெரியவில்லை)  

3. அமெரிக்காவுடன் இந்தியா தொடர்ந்து நட்புறவை வளர்த்து வருவதைச் சீனா தனக்கெதிரானதாகப் பார்க்கிறது. தென்சீனக் கடல் பிராந்தியம் முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடுவதை இந்தியா ஏற்கவில்லை. சீனாவின் கடல் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு செக் வைக்கிற விதத்தில் இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் நான்கு நாடுகள் கூட்டணி ஒன்று (அமெரிக்கா, ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் ஜப்பான்) உருவாகலாம் என்பதே சீனாவுக்கு கசப்பானதாக இருக்கிறது.

4. தலாய் லாமாவும் கூட சீனர்களின் வாய்க்குள்போன திபெத் இனி சுதந்திரக்காற்றை அனுபவிக்கப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டாலும், அவரைக் கடவுளாக வணங்கும் லாமா பௌத்த மதத்தினரைக்கண்டு சீனா இன்னமும் மிரளத் தான் செய்கிறது.

5. தன்னுடைய ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் அனைவரையுமே இஸ்லாமியத் தீவீரவாதிகளாகப் பார்த்து, கடுமையான அடக்குமுறைகள், மூளைச்சலவை செய்யும் பயிற்சி முகாம்களை நடத்திவரும் சீனா, பாகிஸ்தான் என்ற ஒரு சிறுநாடு இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்து அக்கம்பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? அதுவும் போக பாகிஸ்தானின் இந்தத் பயங்கரவாத ஏற்றுமதிக்கு, ஐநாபாதுகாப்பு சபையில் தொடர்ந்து பாதுகாத்து வருவது ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை, சீனா தனது ப்ராக்சியாக பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்திவருகிறது என்பது மட்டும் தான்.

இன்றைய நாட்களில் பொருளாதாரம் தான் ராஜீய உறவுகளின் சிக்கலாகவும், தீர்வாகவும் இருக்கிறது என்பது தான் ஒன்லைனர்.   

     
எதிர்க்க வேண்டும்.....
ஒவ்வொரு திட்டத்தையும் எதிர்த்தே ஆக வேண்டும்.....
இவர் என்பதால் எதிர்ப்பு... அவர் என்பதால் மென்மையான எதிர்ப்பு.....
எல்லாமே சரிதான்?
என்னதான் எதிர்த்துத் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தாலும் நடக்கும் எதையும் எவரால் நிறுத்திவிட முடிகின்றது? ஒரு சின்ன சலனத்தைக் கூட இங்கு உருவாக்க முடிவதில்லை. சலனத்தை உருவாக்க வாய்ப்பு உள்ளவர்கள் கூட அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பது தான் உண்மை.
இந்திய ரயில்வே துறை தனியாரை அனுமதித்துள்ளது. முதல் முறையாக டெல்லியிலிருந்து லக்னோவிற்கு தனியார் ரயில் ஓடத் தொடங்கி உள்ளது.
அரசு வாங்கிக் கொண்டிருந்த கட்டணம் (AC) Rs. 1855/- Non-AC. - 1165/-
இப்போது தனியார் வாங்கும் கட்டணம் (AC) Rs. 2450/- Non-AC. - Rs. 1565/-
குளிர்சாதன வசதியில் அதிகமாக ரூபாய் 595 மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூபாய் 400 அதிகமாகக் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளார்கள்.
பயண நேரம் ஒன்றாகவே உள்ளது. தனியார் ரயில் இரண்டு இடங்களில் மட்டும் நிறுத்துகின்றார்கள். அரசு ரயில் ஐந்து இடங்களில் நிறுத்துகின்றார்கள்.
எல்லோரும் பொங்குகின்றார்கள். ஆனால் எனக்குள் இருக்கும் கேள்விகள்
1. இந்த தனியார் ரயிலில் வட இந்தியர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ய முடியுமா?
2. முன்பதிவு செய்த இடங்களில் கேள்வி கேட்பார் இல்லாமல் வந்து மொத்தமாக வந்து அமர்வார்களா?
3. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை குதப்பிக் கொண்டேயிருக்கும் புகையிலை எச்சிலை எங்கே துப்புவார்கள்? அதற்கு ஏதும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?
நொந்த கட்டண குறிப்பு: திருப்பூர் முதல் சென்னைக்கு ரயில் கட்டணம் ரூபாய் 170. ஆம்னி பேருந்தில் இயல்பான கட்டணம் 700 ஆனால் பண்டிகை நாட்கள் விடுமுறை நாட்களில் 1700க்கு குறைவாக வாங்குவதில்லை. கேள்வி கேட்டால் வரிசையில் பின்னால் இருப்பவர்களுக்கு அந்த டிக்கெட் போய்விடும். அவர் பேசாமல் அதை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்?
இதற்கு என்ன செய்யலாம் ஒறவுகளே?
மீண்டும் சந்திப்போம். 

2 comments:

  1. சில தினங்களில் அதிகாலையில் வேலையிருக்கும். இது போன்ற சமயங்களில் பழைய படிக்காமல் விட்டுப் போன மின் அஞ்சலில் உள்ள ஒவ்வொரு கடிதமாக பார்த்து படித்து விட்டு நீக்குவேன். அப்படி உங்களின் பழைய பதிவுகள் ஒவ்வொன்றையும் பார்த்து படித்து வந்த போது சில விசயங்கள் தோன்றியது. நிச்சயமாக இன்றைய சூழலில் அன்றைய ஒரு தினம் மட்டுமே செய்திகள் நமக்கு இயல்பானதாக இருக்கிறதோ? என்று தோன்றுகின்றது. சில தினங்கள் கடந்தாலே சுவராசியம் இல்லாமல் போய்விடும் போல. முதலில் திருச்சி முதல் இராமேஸ்வரம் வரைக்கும் பகல் நேரங்களில் சில ரயில்கள் கூடுதலாக விட வேண்டும் என்ற என் கோரிக்கையை அமைச்சருக்கு எழுதி உள்ளேன். காரைக்குடிக்கு திருச்சியில் இருந்து செல்ல ரயில்நேரங்கள் கஷ்டமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      இன்றைய செய்தி நாளைய வரலாறு என்பதெல்லாம் வெறும் உடான்ஸ்! இப்போதைய செய்தி இப்போதே குப்பை என்கிற அளவுக்கு நம்மைச் சுற்றி வரும் செய்திகளில் விஷயத்தை கிரகித்துக் கொள்ளத் தவறுவதாக வெகுஜன மனோநிலை அத்தனை lethargic ஆக இருக்கிறது. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் ஜனங்களுடைய இந்த அலட்சியம், அல்லது மறதியை நன்றாகவே பயன்படுத்திக் கொளகிறார்கள்.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!