#தேர்தல்களம் இரு மாநிலத் தேர்தல்கள் சொல்வதென்ன?

நேற்றைய பதிவிலேயே கொஞ்சம் கோடிகாட்டி இருந்தது தான்! வாக்குச்சீட்டு ஜனநாயகம் எப்போதுமே கடைசிநேர ஆச்சரியங்களை அளிக்கக் கூடியதுதான்! இங்கே தமிழக இடைத்தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து தி மு கழகத்தை ஒரு spent force என்று எப்படி முடிவு செய்துவிட முடியாதோ அதே போல அதிமுக மீண்டும் ஜெயலலிதா காலத்தைய வலிமை பெற்றதாகிவிட்டது என்று சொல்வதும் முடியாதுதான்! அதேபோல மஹாராஷ்டிரா ஹரியானா இருமாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில்  காங்கிரஸ் மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டதாக  முடிவு செய்துவிடுவது NDTV சேனலுக்கு  வேண்டுமானால் உகப்பானதாக இருக்கலாம்! உண்மை நிலவரம் அப்படித் தானா?

   
முதலில் இருமாநில அரசியல் களநிலவரமும் வேறுவேறு! இதை மனதில் வைத்துக் கொள்வதோடு அடுத்ததாக ஆயாராம் கயாராம் என்று கட்சி மாறுகிற அலங்கோலத்தை ஆரம்பித்து வைத்த மாநிலம் ஹரியானா என்பதையும் புரிந்து கொண்டால், தேர்தல் முடிவுகளை எப்படி விளங்கிக் கொள்வது என்பதுமே மிக எளிமையானதுதான்!  


களநிலவரத்தைப் புரிந்துகொண்டவராக மஹாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.  சிவசேனா ஒரு லோக்கல் கட்சியாகவே தன்னுடைய அடையாளத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருப்பதன் களநிலவரக் கட்டாயங்களை ஃபட்னவிஸ் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதில்  சிவசேனாவின் பொறுப்பற்ற சீண்டல்களை சட்டை செய்யாமல் இன்னுமொரு 5 வருடங்களை அவர் கடந்தாக வேண்டும். சிவசேனாவுடன் கூட்டணி வைத்ததே கூட பிஜேபி சீட்டுகள் குறைந்ததற்கான காரணமாக இருக்கக்கூடும் என்ற வாதம் செல்லுபடியாகுமா?    அதேபோல 80 வயது, உடல்நலக்குறைவு இவை எதையும் பொருட்படுத்தாமல் சரத் பவார் பம்பரமாகச் சுழன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதில் கிழடுதான், ஆனால் இன்னும் வீரியம் முற்றொட்டாகக் கரைந்து போய்விடவில்லை என்பதை  நிரூபித்திருக்கிறார் என்று கூடச் சொல்லலாம்! கருத்துக் கணிப்பு நடத்தியதில் கிட்டத்தட்ட சரியான ரிசல்ட்டுக்கு அதிக நெருக்கமாக வந்தது India Today-Axis poll, என்பதை நேற்றைய பதிவில் பகிர்ந்திருந்த infographic படத்திலிருந்து  புரிந்து கொள்ளலாம். இந்த மூன்று விஷயங்களும் பாசிட்டிவாகச் சொல்லக் கூடிய விஷயங்கள்.


ஹரியானா அரசியல்களம் யார் வின்னர் யார் ரன்னர் என்று சொல்ல முடியாதபடி இழுபறியாகத்தான் இருக்கிறது என்பதில் காங்கிரசின் பூபிந்தர் ஹூடாவோ, புதிதாக JJP என்றொரு கட்சியை ஆரம்பித்த  ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் 10 சீட்டுகளில் (இப்போது வரை முன்னணிதான்) தான் தான் கிங் மேக்கர் என்று சொல்லிக் கொள்வதோ நடக்காமல் கூடப் போகலாம்! சென்ற முறை மாதிரி ஜாட் + தலித் வாக்குகளை மட்டுமே நம்பியிருந்த காங்கிரசைத் தோற்கடித்த மாதிரி இம்முறை முடியாமல் போனதால் மனோகர்லால் கட்டாரும் முதலிருவரோடு சேர்ந்து, இந்தத் தேர்தலின் நெகடிவ் விஷயமாக ஆகியிருக்கிறார்கள்.

இரண்டுமாநிலங்களிலும் காங்கிரஸ் தலைமையின் பங்கு அனேகமாகப் பூஜ்யம் தான் என்றிருக்கையில் , உள்ளூர்த்  தலைகளுடைய உழைப்பைக் கொச்சைப் படுத்துகிற மாதிரி, காங்கிரஸ் பிழைத்துவிட்டது என்று சொல்ல முடியுமா? அப்படியே ஹரியானாவில் ஆட்சியைப் பிடித்தாலும் இன்னொரு கர்நாடகா குமாரசாமி கதை மாதிரி என்றால் அது உயிர்த்தெழுந்ததன் அடையாளமா?   

ஒரு தெளிவான சித்திரம் இன்னும் ஓரிரு மணிநேரங்களில் கிடைத்து விடலாம். காத்திருந்து பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்.     
              

2 comments:

  1. நீங்க சொல்வது ரொம்பவும் ஏற்றுக்கொள்வதுபோல இல்லை. மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனாவுக்கு பின்னடைவுதான். பாஜக தனியாக நின்றிருக்கணும். இப்போ, தங்களுக்கு அதிக சீட் வந்தால் தன் பையன் முதலமைச்சர் என்ற நிலையில் ஒருவருக்கொருவர் ஒழுங்கா உழைத்த மாதிரி (அதிலும் சிவசேனா) தெரியலை. அதுதான் இந்தப் பின்னடைவுக்குக் காரணம்னு நினைக்கிறேன் (கடைசி வரை பாஜக அரசை விமர்சனம் செஞ்சுக்கிட்டே கூட்டணி வச்சுக்கிட்டா எப்படி உருப்படும்?)

    ஹரியானாவில் என்னைப் பொறுத்தவரை பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் மீண்டு வந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். சவுதாலா கட்சி நிர்வாகிகள் பாஜக கூட்டணியை விரும்பாததால், காங்கிரஸ், சவுதாலா அரசு அமைய அதிக வாய்ப்பு என்று தோன்றுகிறது, பிறகு கர்நாடகாவில் நடந்ததுபோல நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெல்லைத்தமிழன்!

      சிவசேனா வெற்று உதார் விட்டுக் கொண்டே இருக்கிற ஒரு சில்லறைதான்! அவர்களைப் பொறுத்தவரை பணம் கொழிக்கிற மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் கையைவிட்டுப் போய்விடக் கூடாது! அதற்குமேல் ஆசைப் படுவதெல்லாம் வெறும் பில்டப் மட்டும் தான்! இந்த முறை பழைய நண்பர் சரத் பவாரும் கையை விரித்துவிட்டார்! அதனால் அந்தப்பக்கம் போய்விடுவேன் என்று ஒரு வாய்வார்த்தைக்காகக் கூட மிரட்ட முடியாது.

      ஹரியானா கதையே வேறு. ஆயாராம் கயாராம் அரசியலை ஆரம்பித்துவைத்த மாநிலம் அது. அங்கே காங்கிரஸ் கட்சி மீண்டெழுந்து விட்டதாக நினைப்பதற்கு என்ன முகாந்திரம் இருக்கிறது சொல்லுங்கள்! துஷ்யந்த் சவுதாலா குமாரசாமியைவிட shrewed & cunning! கர்நாடகா கதையை இங்கே அரங்கேற்ற முடியாது.

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!