தலைப்பே சொல்கிற மாதிரி, காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைமை சிற்றெறும்பாகக் கூட இல்லை, கரையான் மாதிரிக் கன்னுக்குத் தெரியாத அளவுக்கு கரைந்து போய்க் கொண்டிருக்கிறதோ? இங்கே தமிழ் ஊடகங்களில் இதுவரை காங்கிரசின் பரிதாப நிலையை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை என்பது காங்கிரசுக்காக இல்லை, திமுக முகம் சுளிக்குமே என்பதற்காகத் தான் என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறீர்களா? ஆனால் திமுக முகம் சுளிக்கும் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல் உதிரிகளுக்கு திமுக கொடுத்த 40 கோடி ரூபாய் நன்கொடை விவகாரம் சேனல்களில் சூடான விவாதமாக ஓடிக் கொண்டு இருப்பது ஊடக வினோதம்! அல்லது திமுக வினோதம்!
கூட்டணிக்கு வர திமுக பணம் கொடுத்ததா? என்ற தலைப்பே News 18 தமிழ்நாடு சேனலில் அதுவும் குணசேகரன் நெறியாளர் என்ற விஷயத்தையும் மீறிப்பார்க்க வைத்தது. இந்த விவகாரத்தில், விவாதத்தில் அதிகமாகக் காயப்பட்டது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதும், திமுக விரும்பியதும் அதைத்தானோ? இப்படி ஒரு சந்தேகமும் கூட எனக்கு எழுகிறது. வீடியோ 46 நிமிடம்! விவாதத்தின் இறுதியில் எழுத்தாளர் மாலன் எனக்குப் பிடித்த சப்ஜெக்டான தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றியும் பேசினார் என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்!
கமல் காசர்! இவர் தமிழக அரசியலின் லேட்டஸ்ட் ஜோக்கர்! சீட்டு விளையாட்டில் வேண்டுமானால் ஜோக்கரை எல்லா காம்பினேஷன்களிலும் சேர்த்துக்கொள்வார்கள்! அரசியலில் யாருமே சேர்த்துக்கொள்ள விரும்பாத ஜோக்கர் ஒருவர் உண்டென்றால் அது கமல் காசர் தான்! லயோலா கல்லூரி விஸ்காம் துறை ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் போகிற போக்கில் கரைவேட்டியைக் கோர்த்துப்பேசி விட்டுப் போய்விட்டார். ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்கமுடியாது என்று சொல்லியே பதில் சொல்லிக் கொண்டிருக்கிற தமிழக அரசியல் வினோதம் இந்த வீடியோ 38 நிமிட நான் ஸ்டாப் காமெடி.
காந்தி ஜெயந்தியை ஒட்டி நடந்த தொலைக்காட்சி விவாதங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி எழுதிய ஒரு நீண்ட கட்டுரையை முன்வைத்து நடந்த இந்த விவாதம் தான் உலகிலேயே முதல்முறையாக என்ற அடைமொழி, கூவலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்! திராவிடங்களின் பரப்புரைகளுக்கு மட்டுமே முதலிடம் கொடுத்துவருகிற சேனல்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இப்படி ஒரு மையமான இடம் கொடுக்கின்றன என்றால், அது கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திருக்கிற சோதனை, போதாதகாலம் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. வீடியோ 52 நிமிடம்.
அதெல்லாம் சரி! விவகாரமான ஒரு தலைப்பை வைத்துவிட்டு எதற்காக இதையெல்லாம் படமாகக் காட்டுகிறாய் என்று கேட்க நினைக்கிறீர்களா? நீங்களும் என் தோழரே!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சமஉ அல்லது எம்பியின் வேலை என்ன? எந்த அவைக்குஜனநாயக த்தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த அவை கூட்டப்படும் நேரத்தில், அங்கே இருந்து தன்னுடைய தொகுதியை represent செய்யவேண்டும் என்பதெல்லாம் காங்கிரஸ் நடைமுறைகளில் காற்றில் பறக்க விடப்பட்ட விஷயங்கள்! ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ரே பரேலி நாடாளுமன்றத்துக்குட்பட்ட சதர் தொகுதி சமஉ அதிதி சிங் காங்கிரஸ் கலாசாரத்தைப் பின்பற்றாமல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு உபி சட்டமன்றத்தின் இருநாள் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்! யோகி ஆதித்ய நாத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார். எல்லாவற்றையும் விட ப்ரியங்கா வாத்ரா நடத்தும் பாத யாத்திரையைப் புறக்கணித்துவிட்டு, சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார் என்பதில் இதற்கு முன்பே கூட ப்ரியங்கா வாத்ரா நடத்திய பேரணி அல்லது யாத்ராவைப் புறக்கணித்திருக்கிறார் என்பதுதான் விசேஷம்! ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டதை ஆதரித்திருக்கிறார்! காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் கட்சி மூன்றும் இந்தச் சிறப்புக் கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருந்ததை மீறி இருக்கிறார் என்பதில் காங்கிரஸ் கட்சி தலை(மை)யற்ற முண்டமாகத் தான் இன்னும் அலைந்து கொண்டிருக்கிறது என்கிற சிதம்பர ரகசியம் வெளிப்பட்டிருக்கிறது. இப்போது தலைப்போடு இந்தச் செய்தி பொருந்துகிறதா இல்லையா?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!