ஒரு புதன் கிழமை! செய்திகளி(ல்)ன் அரசியல்!

உலகின் பலமூலை முடுக்குகளில் நடக்கிற பல சம்பவங்கள் நம்மை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கவலை, அக்கறை  கொஞ்சமும் இல்லாமல் உள்ளூர் கலாட்டாக்களில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று என்ன அநியாயம் நடந்தது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவது தமிழருக்கே உண்டான தனிக் குணமோ? 



இப்படியெல்லாம் ஆகும் என்று ஊகம் செய்ய முடிந்திருந்தால் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை இப்படி ஒரு பாடலை எழுதியே இருக்கமாட்டாரோ என்ற சந்தேகம் நீண்டநாட்களாக எனக்குண்டு! அடுத்தவன் கதைக்கு வசனம் எழுதியே ஆட்சியைப் பிடிக்கிற வாய்ப்பு கருணாநிதிக்குக் கிடைக்க வேண்டும் என்று எழுதிவைத்துவிட்டாளோ அந்த பராசக்தி என அவளையே கூட  கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கவேண்டும் என்று இந்த புதன்கிழமை நவராத்ரி மூன்றாவது நாளில் தோன்றுகிறது!


கருணாநிதியின்  அதிர்ஷ்டம் அவருடைய ஏறுமுகமாக இருந்த ஆரம்ப   நாட்களில் சமுக ஊடகங்கள் இந்த அளவுக்குப் பரவலாக இல்லை. அப்படி இருந்திருந்தால், இன்றைக்கு  94 வயதாகும் மலேசியப் பிரதமர் மஹாதிர் முகமதுக்கு ட்வீட்டரில் எதிர்வசனம் சொல்லிக் கிழிக்கிற மாதிரியே ஆகியிருக்கும் இல்லையா! நம்மூர்  திராவிடங்கள் மாதிரியே  #ஊருக்குத்தான்உபதேசம் என்று மலேசியப் பிரதமர் வரம்புமீறி இந்தியாவுக்கு உபதேசம் செய்ய முயன்றால் இப்படிக்கு கேலிப் பொருளாகி நிற்க வேண்டியது தான்! ட்வீட்டரில் இந்தவிஷயத்தில் எதிரும் புதிருமான விவாதங்கள் இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது!  சமுக வலைத்தளங்களுடைய வலிமையே இந்த மாதிரிப்  பொய்யான பேர்வழிகளை உடனுக்குடன் அம்பலப் படுத்துவதில் தான் இருக்கிறது! பொய்ச்செய்தி பரப்புவதில் அல்ல என்பதை இந்த நேரத்தில் அழுத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 


எத்தனையோ முக்கியமான விஷயங்கள் விவாதத்துக்கும் தெளிவு படுத்திக்கொள்வதற்கும் இருக்கும் போது நம்மூர் சேனல்களுக்கு திமுகவிடமிருந்து உதிரிக் கட்சிகள் எவ்வளவு பணம் வாங்கின என்ற கேள்வியில் செலெக்டிவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வலது கட்சியும் மட்டுமே கண்ணுக்குத் தெரிவதில், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கோடி ரூபாய் அதிகம் கொடுக்கப்பட்டது, ஒரே சீட்டில் நின்ற கொங்கு நாடு ஈஸ்வரன் கட்சிக்கு 15 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதன் பின்னணி லாஜிக் பற்றி யாருமே பேசமாட்டேன் என்கிறார்களே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தோழர் சிந்தன் கவலைப்படுகிற மாதிரித் தான் விவாதத்தின் ஆரம்பம் இருந்தது. எதற்கெடுத்தாலும் வலது கம்யூனிஸ்ட் கட்சியுடன் மட்டுமே ஒப்பிட்டு தாங்கள் எவ்வளவு பலசாலி என்று உறுப்பினர்களிடம் பீற்றிக்கொள்கிற வழக்கம் உள்ள மார்க்சிஸ்டுகள், இந்த விஷயத்தில் வலதுகளைவிடத் தங்களைத் திமுக மட்டம் தட்டிவிட்ட மாதிரியான தோற்றம் வருவதை விரும்பவில்லை என்பது கூட சிந்தன் பொருமுவதற்கு காரணமாக இருக்கலாமோ? ஒரு கேள்விக்கு நேரடியான பதில் சொல்வதைத் தவிர்த்துவிட்டு, எதிர்க் கேள்விகளால் பிரச்சினையைத் திசைதிருப்பும் முயற்சிகள் எல்லாநேரங்களிலும் பலனளிப்பதில்லை! 

இன்று படித்ததில் பிடித்தது

அக்டோபர் 2 ஆதலால், பலர் காந்தியைப் பற்றியும், சிலர் லால்பகதூர் சாஸ்திரியைப் பற்றியும் வரிந்து வரிந்து எழுதிக்கொண்டிருக்கையில், இங்கே ஒரு புராதன இந்திப்படம் குறித்து எழுதுவது வியப்பாக இருக்கலாம். ஆனால், இந்தப் படத்துக்கும் லால்பகதூர் சாஸ்திரிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
1967-ம் ஆண்டு மனோஜ்குமார் நடித்து, இயக்கிய ‘உப்கார்’ என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் கதைக்கான ஒன்-லைனரைச் சொன்னவர் –சாட்சாத் லால்பகதூர் சாஸ்திரி ஆவார்! மனோஜ்குமாரிடம் அவர் சொன்னது; ‘எனக்கு மிகவும் பிடித்தமான ‘ஜெய் ஜவான்; ஜெய் கிஸான்’ என்ற கோஷத்தின் அடிப்படையில் ஒரு படம் எடுங்களேன்!’. அப்படி உருவானதுதான் ‘உப்கார்’; அப்புறம் உருவானவர்தான் ‘மிஸ்டர் பாரத்’ என்று இன்றளவிலும் நினைவுகூரப்படுகிற, விமர்சகர்களால் ‘Pop-Patriotism’ என்று கலாய்க்கப்படுகிற, தேசபக்திப் படங்களின் முன்னோடி இயக்குனர் மனோஜ்குமார்.
’உப்கார்’ படத்தைத் தொடர்ந்து, ‘பூரப் அவுர் பஸ்சிம்’, ரோட்டி கபடா அவுர் மக்கான்’ என்று வீறுநடைபோட்டு, ‘கலியுக் கி ராமாயண்’ என்று ஒரு படம் எடுக்கப்போய், சிவசேனாவிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் வரைக்கும் மிஸ்டர் பாரத் ஒரு trend-setter என்பதை அவரது மிக மோசமான விரோதிகூட மறுப்பதற்கில்லை.
’உப்கார்’ படத்துக்கு முன்னால் அவர் ஒன்றும் உப்புகாரமில்லாத நடிகராக இருக்கவில்லை. ஹரியாலி அவுர் ராஸ்தா, வோ கௌன் தீ, அனிதா, கும்நாம் என்ற தொடர் சூப்பர்-ஹிட் படங்களில் மனோஜ்குமார்தான் கதாநாயகன். திரைக்கதையில் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த மனோஜ்குமாரின் சில படங்களில் அவரது மறைமுக பங்களிப்பு இருந்தே வந்திருக்கிறது. அப்படி அவரது கைவண்ணம் பட்டு மெருகேறிய படங்களில் ஒன்றுதான் ’ஷகீத்’! அந்தப் படத்தில் பகத்சிங் வேடத்தை ஏற்றதோடல்லாமல், திரைக்கதையில் உதவியதோடல்லாமல், கணிசமான பகுதியை அவர்தான் இயக்கியிருந்தார் என்ற குட்டு பின்னாளில் வெளிப்பட்டது.
’ஷகீத்’ வெற்றிப்படமாக அமைந்ததோடு, சில விருதுகளையும் பெறவே, அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அதன் விளைவுதான் ‘உப்கார்’ என்ற சூப்பர்-ஹிட் திரைப்படம்!
கதையென்று பார்த்தால், விவசாயியான அண்ணன், போர் மூண்டதும் ராணுவத்தில் சேர்கிறான்; கஷ்டப்பட்டுப் படிக்க வைத்த தம்பியோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, தேசத்துக்கு துரோகம் செய்கிறான். இதில் தம்பியாக நடிப்பதற்கு முதலில் ஒப்பந்தமானவர், பின்னாளில் இந்தியத் திரையுலகையே உலுக்கிய ராஜேஷ் கன்னா என்பது ஒரு சுவாரசியமான குட்டித்தகவல்! ஹீரோ வாய்ப்பு வரவே, ராஜேஷ் கன்னா விலக, அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த பிரேம் சோப்ரா தம்பியானார். அப்புறம், ஆஷா பாரீக் டாக்டராக வந்து குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் செய்தார். மொத்தத்தில், பிரதமருக்குப் பிடித்தமான கொள்கையோடு, அப்போது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக இருந்த குடும்பக் கட்டுப்பாட்டையும் தொட்டாகி விட்டது.
புத்திசாலி இயக்குனர் மனோஜ்குமார்! இனிமையான பாடல்கள், தேவையான அளவுக்கு தேசபக்தி, அவ்வப்போது கரவொலி கிளப்புகிற வசனங்கள் என்று கச்சிதமாய்க் கலந்து, சற்றே கவர்ச்சியைத் தாளித்துப் பரிமாறுவதில் படுசமர்த்தர்!
இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் மூண்டபோது, லால்பகதூர் சாஸ்திரியின் அறைகூவலை ஏற்று, ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்த அந்த உணர்ச்சிகரமான வரலாற்று நிகழ்வை மையமாக்கி, விவசாயத்தின் மேன்மையை ‘மேரே தேஷ் கி தர்தி’ என்று மகேந்திரகபூரின் கொம்புத்தேன் குரலில் பாடவைத்து, அன்றைய தலைமுறையினர் கொண்டாடுகிற படமாக்கினார் மனோஜ்குமார்.
கல்யாண்ஜி – ஆன்ந்த்ஜியின் இசையமைப்பில் பாடல்கள் தித்தித்தன. குறிப்பிட்டுச் சொல்வதானால்…
1. தீவானோன் ஸே யே மத் பூச்சோ
2. கஸ்மே வாதே பியார் வஃபா
3. மேரே தேஷ் கீ தர்தி
பொதுவாக யார் டியூனையும் எடுத்துக்கொள்ளாத இசைஞானி இளையராஜாவே கூட, ‘கஸ்மே வாதே பியார் வஃபா’ மெட்டை, தனது ‘ நீங்கள் கேட்டவை’ படத்தில் ‘கனவு காணும் வாழ்க்கை யாவும்’ என்று எடுத்தாண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூரதர்ஷன் யுகத்தில், ஆகஸ்ட் 15, ஜனவரி 26 என்றால் மனோஜ்குமார் படமோ, பாடல்களோ பார்த்தே ஆக வேண்டும் என்று ஒரு கட்டாயமே இருந்தது.
ஏதோ மனோஜ்குமார் ஒருவர்தான் சமகாலப் பிரச்சினைகள் குறித்து சினிமா எடுத்த்தாக எண்ண வேண்டாம். பாஸு பட்டாச்சார்ஜி, பிமல் ராய், குரு தத், ராஜ்கபூர் போன்றோரும் கொழுந்து விட்டெரிகிற பிரச்சினைகளின் அடிப்படையில் திரைப்படம் எடுத்தவர்கள்தான். குரு தத் படங்கள் கவிதைகள் போல; எழுதினால் புத்தகம் போடுமளவுக்கு எழுதலாம். ராஜ்கபூர் சற்றே சார்லீ சாப்ளின் தாக்கத்தால் முதல்பாதியில் கொஞ்சம் ஜாலியாக இருந்துவிட்டு சாவகாசமாகப் பிரச்சினைகளை எடுத்துப்போடுவார். மனோஜ்குமார் கிட்டத்தட்ட ஒரு மினி-மீல்ஸ் மாதிரி!
மையப்பிரச்சினை ‘உணவு-உடை-வீடு(ரோட்டி-கபடா அவுர் மக்கான்) என்று எடுத்துக் கொண்டாலும், ஒரேயடியாக பார்வையாளர்களை இறுக்கத்துக்குள் கொண்டு போகாமல், ஜீனத் அமனுக்கு வெங்காயத்தோல் புடவை கட்டி மழையில் நனைய விடுவார்; ஒரு மளிகைக்கடையின் குடோனில் குவித்து வைத்த கோதுமை மாவின் மீது மௌஷ்மி சாட்டர்ஜியை மூன்று பேர் கூட்டு வன்புணர்ச்சி செய்வதுபோலக் காட்சி வைப்பார். ‘அடடா,’ என்று அங்கலாய்ப்பதற்குள் செருப்படி வசனங்களை வைத்து, ‘அந்த சீன் எல்லாம் சும்மா லுல்லுலாயிக்கு…இதுதான் நிஜப்படம்,’ என்று பார்வையாளர்களைக் கரகரவென்று இழுத்து வந்து கதைக்குள் அமரவைப்பார். கில்லாடி டைரக்டர்!
அவரது பாணியை பின்னாளில் பலர் பின்பற்றினார்கள். ஆனால், மிஸ்டர் பாரத் என்ற பட்டம் மட்டும் அவரிடமே இன்றுவரை இருக்கிறது.
பின்னாளில் மிருணாள் சென், ஷியாம் பெனகல், புத்த்தேப் தாஸ்குப்தா, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோர் சுவற்றில் முட்டி முட்டி சொல்ல முடியாமல் போன விஷயங்களை, ஒரு பக்கா மசாலாப் படத்தில் அலட்சியமாகச் சொல்லி வெற்றி கண்டவர் என்றால் அது மனோஜ்குமார் மட்டும்தான்!
(இந்திப்படம் பற்றி எழுதியதற்காக யாரும் கொடிபிடிக்க வேண்டாம். நானே ஒரு காலத்தில் ‘இந்தி ஒழிக! இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று கோஷம் போட்டவனாக்கும்!)


ஏஞ்சாமி! இங்கே ஜிவாஜி ஜிவாஜின்னு ஒருத்தர் ஏதோ தேசபக்தி ஊட்டுகிற பலபடங்களில் நடித்தாராமே அதெல்லாம் எப்படியாம்?  ஞாபகத்துக்கு வரலையான்னு  சேட்டைக்காரனிடமே சேட்டை செய்ய முடியாதே!

இன்று லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாளும் கூட! இது ஒரு சாம்பிள் மட்டுமே! சாஸ்திரி என்று இந்தப்பக்கங்களில் தேடிப் பாருங்கள், இன்னும் பல பதிவுகள் கிடைக்கும்!

மீண்டும் சந்திப்போம்.   
       

2 comments:

  1. 1. மகாதீர் வெளியே அப்பட்டமாக காட்டிக் கொள்ளாமல் அடி ஆழம் வரைக்கும் இனவாதியாகவே வாழ்ந்தவர் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அவர் ஆரோக்கியம் அதிர்ஷடம் 94 வரைக்கும் இருப்பது ஆச்சரியம். 2. சிந்தன் சமாளிப்பது சிரிப்பை வரவழைத்தது. இங்கு மீன் கடையில் கூட கம்யூ கட்சிகள் மாமூல் வாங்குகின்றார்கள். இதைப் பற்றி எழுதுகிறேன். திமுக அடுத்து சசிகலா உள்ளே வந்தால் அதிமுக பின்னால் இவர்கள் அனைவரும் சென்று விடக்கூடாது என்பதற்காக இதனை அவர்களே கிளப்பினார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். 3. வேணுகோபால் எழுதிய விசயங்கள் எனக்குப் புதிது. எல்லாமே இன்று சிறப்பு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி!

      மலேசிய அரசியல் மகாதிரை விட மிகவும் வினோதமான குழப்பங்களின் கலவை.

      இன்றைக்கு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுகவிடம் நன்கொடை வாங்கிய விவகாரத்தில் நெளிந்து கொண்டே பேசுகிற வீடியோ ஒன்றுடன் பகிர்ந்திருக்கிறேன். திமுக இதைக்கிளப்பிவிட்டு அமைதியாக இருப்பதிலிருந்தே அவர்களுடைய வேலையாகத்தான் இருக்கும் என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

      வேணுகோபால் சொந்த அனுபவத்தில் நொந்துபோய் அரசியலே பேசவேண்டாமென்று இப்படி எழுத ஆரம்பித்திருக்கிறார். எனக்கு அப்படி நொந்துகொள்கிற நிலை வராவிட்டாலும் கூட, அலுத்துப்போய்
      ச்சும்மா ஜாலிக்கு என்று சங்கம் ஹிந்திப்பட விமரிசனம் என்று சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுத ஆரம்பித்தாள் கடைசியாக கல்கியின் கள்வனின் காதலி விமரிசனம் என்று எழுத ஆரம்பித்தது தற்செயல் தான்! .

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!