ஒரு புதன் கிழமை! கவனத்தில் கொள்ள சில விஷயங்கள்!

துவங்கப்பட்ட  தினமான ஒவ்வொரு விஜயதசமி நாளன்றும் நாக்பூர் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் (RSS) தலைமையகத்துக்கு சில பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் படுவதும், முக்கிய நிர்வாகிகள் மத்தியில்  RSS தலைவர் உரை நிகழ்த்துவதும் வெகுகாலமாகவே நடந்து வருகிற ஒரு நிகழ்வு தான்! இந்தவருடத்தின் சிறப்பு விருந்தினராக  HCL நிறுவனர் சிவ நாடார் கலந்து கொண்டார் என்பதோடு RSS தலைவர் என்ன பேசினார் என்பதையும் கூட சமீப காலமாக தேசிய அளவில் ஊடகங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன,


மிகவும்  ரகசியமான ஒரு அமைப்பு RSS, ஹிட்லரைக் கொண்டாடுகிற கூட்டம், முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றெல்லாம் இங்கே பெரிதாகக்  கிளப்பிவிடப்படும் வதந்தீகளில் மட்டுமே அறியப்படும் ஒரு அமைப்பின் தலைவர் பேசுவதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பானேன்? அதுவும் சேகர் குப்தா மாதிரியான காங்கிரஸ் சார்புள்ள ஒரு பத்திரிகையாளர்,  RSS தலைவர் மோகன் பகவத் 63 நிமிட உரையின் சாரமென்ன என்று ஒரு 19 நிமிஷம் அரும்பொருள் விளக்கமாகச் சொல்வானேன்? முந்தைய நாட்களைப் போல அந்த அமைப்பைப் புறந்தள்ளிவிடவோ, வதந்திகளிலேயே ஒரு மோசமான பிம்பத்தைக் கட்டமைத்து பூச்சாண்டி காட்டிய மாதிரியோ செய்ய முடியாது என்பதை சேகர் குப்தாவின் விளக்கவுரை காட்டுவதாகவே எனக்குப் படுகிறது. தவிர மோகன் பகவத் பேசியது ஹிந்தியில், எனக்குப் புரியாது என்கிற போது சேகர் குப்தா மாதிரியானவர்களும் கொஞ்சம் தேவைப் படுகிறார்கள்! ஐந்து முக்கியமான விஷயங்களாக என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்!   


பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு வெளியுறவுக் கொள்கையில் சில குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப் பட்டிருக்கின்றன. முக்கியமாக Neighbourhood First என அண்டை நாடுகளுடனான உறவுகளுக்கு முதல் இடம், அடுத்து Act East என்ற கிழக்கத்திய ஆசிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை மேம்படுத்துதல் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டன. மேற்கத்திய உலகுடன் இருந்த உறவுகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றங்களும் நிகழ்ந்தன. இந்தியத் துணைக்கண்டத்தில், மேற்கே பாகிஸ்தான் ஒன்று மட்டும் தான் இன்னமும் இந்தியாவுடன் ஒரு வன்மத்துடன் கூடிய விரோதத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கிழக்கே பங்களாதேசத்துடன் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் எல்லாம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டு, ஒரு நல்லுறவு நிலவுகிறது.

  
பங்களாதேசத்தின் பிரதமருக்கு சர்வதேச விவகாரங்களில் ஆலோசகராக இருக்கும் கோவ்ஹர் ரிஸ்வி இங்கே The Print தளத்தின் ஜ்யோதி மல்ஹோத்ராவுடன் உரையாடுகிற 24  நிமிட வீடியோவைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்! இங்கே வரும் நண்பர்களுக்கு உபயோகமான தகவல்களைத் தொகுத்து வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் வீடியோ செய்திகள்,விவாதங்களும் பதிவில் சேர்த்து வழங்கப் படுகின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டால் இங்கே வீடியோக்களையும் தவிர்த்துவிடாமல் பார்க்கவேண்டும் என்கிற என்னுடைய தரப்பு வாதமும் புரியும்! Perception is often uninformed என்று நாசூக்காகச் சொல்கிற ரிஸ்வியின்   இந்த நேர்காணல் மம்தா பானெர்ஜி முதலான சில அரசியல்வாதிகள்,  National Registry of Citizens (NRC) விஷயத்தில் எப்படி விஷமத்தனமான ஒரு எதிர்ப்பு அரசியலைச் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள மிகவும்  உதவியாக இருக்கும். 


காங்கிரஸ் கட்சியே கரைந்து உருக்குலைந்து  காணாமல் போய்க் கொண்டிருக்கும் தருணத்தில், ராகுல் காண்டி தனது SPG பாதுகாப்புக்கும் கூட  டிமிக்கி கொடுத்துவிட்டு அடிக்கடி எங்கேயோ ஓடிப்போய்க் கொண்டிருப்பது அத்தனை முக்கியமான விஷயமா? இல்லைதான்! ஆனால் திரும்ப வந்து ட்வீட்டரில் ஏதாவது அரைவேக்காட்டுத்தனமான அக்கப்போர் நடத்திவிட்டு மறுபடியும் எங்கோ போய் ஒளிந்துகொள்கிற nuisance value  மட்டும்தான் எரிச்சலூட்டுகிற விஷயம்!

மீண்டும் சந்திப்போம்.     
        

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!