இட்லி வடை பொங்கல்! #38 கழகம்! காங்கிரஸ்! = குழப்பம்!

முதலில் கர்நாடக அரசியல் அடுத்து காஷ்மீர் அரசியல் என்றே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதில் தமிழக அரசியலை சுத்தமாக மறந்துவிட்டாயா என்று நண்பர்கள் சிலருக்கு சந்தேகம் கேட்கத் தோன்றி, ஆனால் கேட்க மறந்துபோய் விட்டார்களோ?😄😁😉  


தமிழக அரசியலையோ, தமிழக அரசியல்வாதிகளுடைய கோமாளித்தனங்களையோ நான் மறந்துவிடவில்லை! ஆனால் கோமாளிகளுக்கு முக்கியத்துவமோ கவனமோ அளிப்பதை விடப்பல   முக்கியமான விஷயங்கள் பகிர்ந்து கொள்வதற்கு இருந்தன என்பது தான் உண்மையான காரணம். முதலில் மாநிலங்களவையில் வைகோ காஷ்மீர் விஷயத்தில் பேசியது, தமிழக  காங்கிரஸ் புள்ளிகளுக்கு ரோஷம் வந்துவிட்டதாம்! என்ன பேசினார் என்ன உறுத்தல் என்பதை மேலே வீடியோவில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். கே எஸ் அழகிரி எங்கள் ஆதரவில் ஜெயித்துவிட்டு எங்களையே குறைசொல்லிப் பேசுவதா என்று காட்டமான ஒரு அறிக்கை விட, அப்புறம்  ஏனடா கேட்டுத்தொலைத்தோம் என்று காங்கிரஸ்காரனே நொந்துகொள்கிற அளவுக்கு வைகோவின் பதில் இருந்தது என்பது தமிழக அரசியலுக்கே உரித்தான உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் ரகக் காமெடி! வைகோ அப்படி என்ன பதில் சொன்னார்? என்பதை விட எங்கே ரத்தம் வந்தாலும் அதையே ஒரு விவாதத் தலைப்பாக்கி நம்மூர் சேனல்கள் அதிலேயே   கிளுகிளுப்பாகி விட மாட்டார்களா? 


சனிக்கிழமை எண்டெர்டெயின்மென்ட் தேடுகிறவர்களுக்கு இந்த 50 நிமிட தறுதலைத்தனமான விவாதம் கொஞ்சம் பொழுதுபோக்க மட்டும் உதவலாம்! அது போக திமுக கடந்த 7 ஆம் தேதி நடத்திய சிலைதிறப்பு விழா செய்திகளில் கனிமொழி ஓரங்கட்டப்பட்டது தான் கொஞ்சம் காமெடிப் பரிதாபம்! 


‘‘நினைவுநாளன்று அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. அதில் ஸ்டாலினுடன் கனிமொழியும் சேர்ந்து நடந்து வந்தார். அவரைத் தள்ளிக்கொண்டு ஸ்டாலின் பக்கத்தில் வர முயன்றிருக்கிறார் பெண் நிர்வாகி ஒருவர். ஒருகட்டத்தில் கனிமொழி டென்ஷனாகி, ‘நீங்கள் முன்னுக்கு வர, என்னைப் பின்னுக்குத் தள்ளாதீர்கள்’ என்று கடுப்பாகச் சொல்லி விட்டாராம்". என்கிறது ஜூனியர் விகடன் கழுகார் செய்தி   


காங்கிரசின் ஊதுகுழலாகவே இன்றைக்கும் செயல்பட்டு வரும் NDTV நிறுவனர்கள் பிரணாய் ராய் அவரது மனைவி ராதிகா ராய் இருவரும் மணி லாண்டரிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை, வழக்கைச் சந்தித்து வருகிற நேரத்தில் வெளி நாட்டுக்குப் பயணம் போகவிருந்தவர்களை மும்பை விமான நிலையத்தில் சிபிஐ தடுத்து நிறுத்தியிருக்கிறது. மீடியா சுதந்திரத்துக்கு ஆபத்து ஏன்று கூவியிருக்கிறார்கள். உலகத்தில் சக்திவாய்ந்த இந்திய அரசியல் பிரமுகர்கள் (வேற யாரு? சோனியாG தான்!) ஆதரவு இருந்தும் கூட இப்படியானதே என்று      நக்கல் செய்கிறது இந்த கார்டூன்! 


நானும் இன்றைய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஒரு தாற்காலிகத் தலைவர் பெயராவது அறிவிக்கப்பட்டு விடும் என்று பதிவை முடிக்காமல் இதுவரை செய்திகளை பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். காங்கிரசுக்கே உண்டான நாடகத் தனத்தில் காரியகமிட்டி ஒரு ஜனநாயக முடிவை எடுக்க வேண்டுமென்று சோனியாG யும் ராகுல் காண்டியும் recuse அதாவது ஒதுங்கி கொண்டார்களாம்! CWC என்ன முடிவெடுத்ததாம்? ரந்தீப் சுர்ஜீவாலா, காரியகமிட்டி ஒருமனதாக ராகுல் காண்டியே தலைவராக வேண்டுமென்று முடிவு செய்தார்கள் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். 

எந்தவொரு நாடகத்திலும் ஒரு காமெடியோ க்ளைமேக்ஸோ இழுத்துக் கொண்டேபோகாமல் நச்சென்று முடித்தால் தான், அது காமெடியாக அல்லது க்ளைமேக்சாக இருக்கும்!

முடிவெடுக்க முடியாமல் இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே போனால்   சோனியாG, ராகுல் காண்டிகளிடம் சிக்கிக் கொண்ட காங்கிரஸ் என்றாகிவிடும்!

மீண்டும் சந்திப்போம்.

2 comments:

  1. புதிய தலைமுறை போன்ற கட்சி தொலைக்காட்சிகள் விவாதம் நடத்துவதே நகைப்புக்கு உரியது. தொலைக்காட்சி அதிபரின் ஆசையைத்தான் இவங்க விவாதத்துல சொல்றாங்க. இதுக்கு எதுக்கு விவாதம்லாம் நடத்தவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன் சார்! அந்த நாட்களில் தினத்தந்தி சி பா ஆதித்தன் தன்னுடைய பத்திரிகை துணை ஆசிரியர்களுக்கு எது செய்தி என்பதை விளக்க ஒரு நாய் மனிதனைக் கடித்தால் அது செய்தியில்லை. ஒரு மனிதன் நாயைக் கடித்தான் என்றால் அதுதான் செய்தி என்று சொல்லுவாராம். அந்த வரையறையைத் தாண்டி தமிழக ஊடகங்கள் வளரவே இல்லைபோல இருக்கிறதோ? :-)))

      பள்ளிநாட்களில் இருந்து ஒரு பத்திரிகையாளனாக வர வேண்டும், ஒரு பத்திரிகை நடத்திப் பார்க்க வேண்டுமென்கிற கனவில் சில நல்ல பத்திரிகையாளர்களைத் துரத்தித்துரத்தி என்னுடைய சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டதுண்டு. எனக்குமே இன்றைய ஊடகங்களுடைய போக்கு மிக விசித்திரமாகத் தெரிந்ததில் தமிழக அரசியலைத் தொட்டுப் பேசாமலேயே கொஞ்ச நாட்கள் இருந்தேன். என்ன செய்ய?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!