பதிவுகள் ஆயிரம்! கொஞ்சம் திரும்பிப்பார்க்கிறேன்!

இது இந்தப்பக்கங்களில் ஆயிரமாவது பதிவு. அதைவிட 2019 இல் மட்டும் இதையும் சேர்த்தால் 315வது பதிவு என்பதையும் சேர்த்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் விவரங்கள் புரியும். என்னுடைய பிளாக்கர் பக்கத்தில் இன்னொரு விவரமும் இருக்கிறது blogger since 2005. ஆனால் இந்தப்பக்கங்களில் எழுத ஆரம்பித்தது 2008 இலிருந்துதான் என்ற மாதிரி விவரம் கிடைக்கும். உண்மையைச் சொல்லப் போனால் இந்த blog எனக்குப் பரிச்சயமானது 2003-04 வாக்கில் என்றாலும் என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்பதே புரியாமல் இருந்த நாட்கள் அவை. அந்த விஷயமே தெரியாதென்றால் எழுதியதை யார்வந்து படிப்பார்கள் என்பது மட்டும் எப்படிப் புரிந்திருக்கும்? திரும்பிப் பார்க்கையில் மிகவும் வேடிக்கை, கேலியாகத்தான் இப்போது எனக்கே இருக்கிறது!  

  
ஆக blogspot புரிபடாமல் இருந்தநாட்களில், Yahoo!360 எளிமையான சாய்சாக  இருந்ததில் ஆச்சரியமே இல்லை. யாஹூ மெயிலும் யாஹூ!360 உம் தான் ஆரம்பநாட்களில் என்னை எழுத வைத்தவை. ஏகப்பட்ட கூகிள் மெயில் கணக்கு தொடங்கி, பாஸ்வோர்ட் மறந்துபோனதால் அதை வைத்து பரீட்சார்த்தமாகத்  தொடங்கிய முயற்சிகள் காணாமலும் போயின. 2004 ஆம் ஆண்டில் புதிதாகத்  தொடங்கிய கூகிள் கணக்கு தான் இன்றளவும் தொடர்கிறது.  அப்போது கூட என் பிரதான சாய்ஸ்  யாஹூ  மெயிலும் 2005 இன் கடைசியில் யாஹூ!360 உம்தான் இருந்தது! 


2004 ஆம் ஆண்டு மத்தியில், என்னுடைய பணிச் சூழலில் ஏகப்பட்ட சிக்கல்கள், விரோதங்கள் என்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நேரத்தில், அமைதியாகப் பிரார்த்தனையிலேயே, எனது கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்று கொண்டிருந்த நேரம் அது. என்னுடைய கவலைகளைத் தம்பட்டம் அடித்து, சுய பச்சாதாபத்திலோ, அனுதாபம் தேடுவதிலோ எழுதவில்லை. ஊருக்கு உபதேசம் செய்கிற கருவியாகவும் கருதவில்லை. அப்போது மட்டுமில்லை, இப்போதும் கூட எவருக்கும் உபதேசம் செய்கிற பாணியில் எதையுமே எழுத முற்படவில்லை. அப்படி ஒரு எண்ணமுமில்லை!

யாஹூ!360 இல தொடங்கிய வலைப் பதிவுகள், என்னை நானே ஒரு சாட்சியாக இருந்து பார்க்கத் தொடங்கிய ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு பிரார்த்தனையைக் கையில் எடுத்துக் கொண்டு யோசிக்கையில், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புத்திக்கு உறைக்க ஆரம்பித்ததையும், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடி எனக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்த தேடலையும், வெளிப்படுத்துகிற சிறு குறிப்புக்களாகவே அவை இருந்தன. 

ஒரு அழகானசுகமான கனவு கலைகிறது

360.yahoo.com தளம் கலைந்துவிடலாம்.கனவின் நினைவுகள்இன்னமும் இருக்கிறதே! என்று ஜூலை 2009 இல் இங்கே எழுதிய பதிவு  மனக்கண் முன்னே வந்து நிழலாடுகிறது.

யாஹூ!360 இல் என்னுடைய சொந்தக் கருத்தாக எதையும் எழுதவில்லை.  பிரார்த்தனைகள் எல்லாம் ஸ்ரீ அரவிந்தர் அன்னை பற்றி ஆங்கிலத்தில் இருந்து எடுத்துப் போட்டது தான்! ஆனால் அங்கே இருந்த நண்பர்களுடைய பகிர்வுகளில் ஆங்கிலத்தில் கருத்துரை எழுதுவதுண்டு தமிழில் எழுத  ஆரம்பித்தது இங்கேதான் google indic பரிச்சயமான பிறகுதான்! இங்கேயும் பிரார்த்தனைகளாக மட்டுமே ஆரம்பித்தது, என்னை ஒரு அருள்வாக்கு சொல்கிறவன் ரேஞ்சுக்கு கொண்டுபோய் விட்டதில் அதை மாற்ற இதர விஷயங்களையும் எழுத வேண்டியதானது ஒரு தற்செயலான சுவாரசியம்!  

திரட்டிகள் என்று இங்கே க்ளிக் செய்துபார்த்தால் 2009 ஆகஸ்ட் மாதம் பதிவர் வால்பையனுக்கு  சிறந்த சரவெடிப்பதிவர் பட்டம் கொடுத்துக் கலாய்த்து எழுதியது முதல் ஒரு ஆறு பதிவுகள், லேடஸ்ட்டாக தமிழ்மணம் fatal error என்று பதிவுகள் திரட்டப்படாமல் இருப்பது வரையிலான ஒரு வெரைட்டி கிடைக்கும்.

பீர்பால் கதைகள் என்று  தேடிப்பார்த்தால் ஒரு பத்துப் பதினோரு கதைகள் 2009 வாக்கிலேயே ஆரம்பித்து விட்டாலும், இப்போதும் கூடத்  தேடிப்பிடித்து வாசிக்கிற நண்பர்கள் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்! ஒரு புதன் கிழமைக் கலாய்த்தலாக பதிவர் வால் பையனை சதாய்த்ததும் அவரது எதிர்வினையும் அதற்குப் பதிலும் 
  1. பரிணாமத்தை நான் டார்வினடமிருந்து ஆரம்பிக்கவில்லை! என் புரிதலிருந்து ஆரம்பித்திருக்கேன்! கோர்வையற்று செல்வதால் பிராண்டுவது போல் தான் தோன்றும்! எனது புரிதலில் தவறு இருந்தால் தயை கூர்ந்து சுட்டிகாட்டும் படி கேட்டு கொள்கிறேன்!

    டார்வின் புத்தகங்களையும் ஏனைய பிர புத்தகங்களையும் படித்து விளக்க முடியாமல் புத்தகங்களை நம்பும் மதவாதிகளை போல் அல்லாமல் நானக புரிந்து அதன் சாத்தியகூறுகளை ஆராய்ந்து பின் பதிவிடுவது விளக்குவதற்கும் ஏதுவாக இருக்கும் என கருதுகிறேன்!

    எனக்கு தேவை உணவு, அதை பிராண்டியோ, கிழித்தோ, உடைத்தோ அடைய வேண்டியது என் ஆர்வத்திற்கு கட்டாயம் போட வேண்டிய தீனி!, என்ன செய்ய இப்படி மூடனாக பிறந்து விட்டேன்! ஆனால் பாருங்களேன் அக்பரை கூட மூடன் என்று தான் நீங்கள் சொல்கிறீர்கள்!
    ReplyDelete
  2. வால்ஸ்!

    என்னுடைய பார்வையில் நீங்கள் இன்னமும் பரிணாமத்தைப் பற்றிப் பேசவே ஆரம்பிக்கவில்லை! டார்வினைத் தொட்டுத் தான் பரிணாமத்தை விளக்க முடியும் என்றும் நான் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாத விஷயங்களை வைத்துப் பரிணாமக் கொள்கையைப் பற்றி எப்படிப் புரிந்து கொண்டீர்கள், எப்படிப் பதிவில் கொண்டுய் செல்கிறீர்கள் என்பதை நிறையப் பெசியிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

    அறிவியல் கோட்பாடுகளைத் தமிழில் சொல்ல முயற்சியை ஆரம்பித்திருப்பது வரவேற்கத் தக்கதுதான் என்பதில் எனக்கு எந்தவிதமான கருத்துவேறுபாடும் கிடையாது. அதே நேரம், எடுத்துக் கொண்ட விஷயத்தை விட்டு வெகுதூரம் விலகிப் போய்விடுகிற விடலைத்தனம் நீங்கி நல்ல முதிர்ச்சியோடு பதிவுகளை எழுத வேண்டும் என்ற ஆசையையும் பல முறை தெரிவித்த பிறகும், நான் சொல்ல நினைக்காத அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாம்!

    அக்பரையும் மூடன் என்று தான் சொல்வதாக....!

    பீர்பால் கதைகளை, நடப்பு நிலவரங்களோடு பொருத்திக் கொஞ்சம் நையாண்டியோடு எழுதப் பட்ட பதிவுகளை, சரித்திரத்தைப் பிரேத பரிசோதனை செய்யும் பதிவுகளாக ஏன் நினைக்கிறீர்கள்? சரித்திரத்தை அதன் right perspective இல் பார்க்கப் பழகினவன் நான்.
ச்சும்மா ச்சும்மா அரசியல் பேசியே அறுக்கிறாயே என்று குறைப்பட்டுக் கொள்கிறவர்களுக்கு, நானும் வெரைட்டியாக எழுதிப் பார்த்தவன்தான் என்பதை இப்போது சொல்லாமல் வேறெப்போது சொல்வதாம்? பதிவின் கீழே குறியீட்டுச் சொற்களில் தேடிப்பார்த்தால், கவிதைகள், புத்தகங்கள், திரைப்படங்கள் என்று அரசியலைத் தாண்டியும் நிறைய எழுத வாய்ப்பு இருந்தது தெரிய வரும். 

இத்தனை பதிவுகள் எழுதியிருந்தாலும் என் மனத்துக்கு மிக நெருக்கமாக, ஆத்மார்த்தமாக எழுதிய பதிவென்றால் அது ஒரு வங்க நாடோடிக் கதையை வைத்து டாக்டர் மீரா ஷர்மா ஸ்ரீ அரவிந்தர் சொசைட்டி வெளியிடும் All India Magazine மாத இதழில் 2002 ஆம் ஆண்டில் எழுதியிருந்ததை, அப்படியே நேரடி மொழிபெயர்ப்பு என்றில்லாமல் என்னுடைய மனோ பாவம், அனுபவத்துக்குத் தகுந்தமாதிரி எழுதிய கதை தான்! இரண்டு பகுதிகளாக வந்தது.

முதற்பகுதி :  கண்ணன் வந்தான்! ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்!


இத்தனை நாட்களாக என்னோடு இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்கு நன்றி சொல்கிற தருணமாக இவைகளைத் திரும்பிப்பார்க்கிறேன்! நன்றி! வணக்கம்!

மீண்டும் சந்திப்போம்.
    

4 comments:

  1. Sorry for English.

    This is Great Achievement.

    என்னை நானே ஒரு சாட்சியாக இருந்து பார்க்கத் தொடங்கிய ஒரு அனுபவத்தின் வெளிப்பாடு. ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு பிரார்த்தனையைக் கையில் எடுத்துக் கொண்டு யோசிக்கையில், எங்கே தவறு நடந்திருக்கிறது என்பது புத்திக்கு உறைக்க ஆரம்பித்ததையும், இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை தேடி எனக்குள்ளேயே ஆராய்ந்து கொண்டிருந்த தேடலையும், வெளிப்படுத்துகிற சிறு குறிப்புக்களாகவே அவை இருந்தன.

    Same like me also.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! இதுவே உங்களுடைய ஒரு பதிவில் 1000 எண்ணிக்கையைத் தொடுவேனா என்று கேட்டிருந்ததை, தினசரி ஒரு பதிவாகிலும் எழுதவேண்டும் என்று எழுதியிருந்ததை மனதில் நினைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்ததுதான்!

      ஆயிரம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமே, என்வரையில் சாதனையாகச் சொல்லிக் கொள்ள இதில் எதுவுமே இல்லை. கிட்டத்தட்ட சமகாலத்தில் தொடங்கிய எங்கள்Blog மூவாயிரம் பதிவுகளைத் தாண்டி, வாசகர் எண்ணிக்கை, பக்கப்பார்வைகள், கன்டென்ட் எல்லாவற்றிலுமே மிக உயரத்தில் இருப்பதோடு ஒப்பிட்டால் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அந்தநாட்களில்(2009) பதிவர் வால்பையன் சொல்வார்: ஒரு பதிவு போட்டால் 1500-2000 ஹிட்ஸ் என்று! எனக்கு 2000 ஹிட்ஸ் தொட்ட பதிவுகள் நாலே நாலுதான்!

      Followers, Hits இவைகளைக் குறித்து எனக்கு எந்த மனக்குறையும் அப்போதும் சரி, இடைவெளிவிட்டு இப்போது தினசரி எழுதிக் கொண்டிருக்கும் போதும் சரி இருந்ததே இல்லை. ஆனால் ஒரு ஆரோக்கியமான உரையாடலுக்காக மனம் அன்று ஏங்கிய மாதிரியே இப்போதும் ஏங்கத்தான் செய்கிறது! ஆனால் வந்து எட்டிபார்ப்பவர்கள் முக்கால் நிமிஷத்துக்கு மேல் வலைப் பக்கத்தில் இருந்து பார்க்கிறார்களா என்று பார்த்தால் அதிலும் கூட ஏமாற்றம் தான்!

      வாசிக்க வருகிறவர்களை இழுத்துப்பிடித்துக் கட்டிப்போடுகிற அளவுக்கு எழுத்து இன்னமும் எனக்கு வசமாகவில்லை என்பதை இங்கே ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!

      Delete
  2. உங்கள் வயது வரைக்கும் நான் தொடர்ந்து எழுதினால், எழுத வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் அதுவே பெரிய சாதனை. உங்கள் ஒவ்வொரு பதிவும் அடுத்த ஒரு மணி நேரத்தை தின்று தீர்த்து விடும். அந்த வார முக்கிய பிரச்சனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் பார்வையில், உங்கள் ஆதரவில் நீங்கள் எழுதினாலும் கூட அதில் உள்ள உண்மைகளை என்னால் எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். சுசா மட்டும் தான் நாம் இருவருக்கும் இப்போதைக்கு எல்லைக் கோடு. அவர் சோனியின் மற்றொரு முகத்தை வெளிக் கொண்டுவந்தவர் என்கிற ரீதியில் பார்க்குறீங்க. நான் வேறுவிதமாக பார்க்கிறேன். நீங்கள் அடுத்த பத்து வருடம் ஆரோக்கியத்துடன் 2000 பதிவு எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. சுப்ரமணியன் சுவாமியை மட்டுமல்ல இங்கே வேறு பலரையும் அவர்களுடைய தனித்துவமான சாதனைகளுக்காக, அரசியலில் இந்த மாதிரியும் சிலர் வேண்டியிருக்கிறது என்ற வகையில் மட்டுமே ரசிக்கப் பழகிவிட்டேன் என்று சொன்னால் நம்புவீர்களா ஜோதிஜி?

      சோனியாவை எதிர்த்துக் கலகக் கொடி உயர்த்திய சரத் பவார், PA சங்மா, மம்தா பானெர்ஜி இப்படிப் பலரையும் கொஞ்சம் ஆச்சரியத்தோடு கவனித்தது உண்டு. ஆனால் சுப்ரமணியன் சுவாமி போல இன்று வரை உறுதியாக அவர்களால் முன்பு எடுத்த நிலைபாட்டில் இருக்க முடிந்ததா என்ற கேள்விக்கு விடை கண்டால் சுப்ரமணியன் சுவாமியை இன்னமும் ஏன் வியந்து பார்க்கிறேன் என்பதற்கான விடையும் கிடைத்து விடும். இவர் மாதிரியானவர்கள், இந்திய அரசியலின் தானாக மாறத்துணியாத அசமந்தத்தனத்துக்கு மாற்றாக, வரலாற்றின் திருப்புமுனையாகவே கொண்டாடத்தகுந்தவர்கள் தான்!

      வாழ்த்துக்கு நன்றி!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!