போகாதே போகாதே என்கணவா என்றொரு பிலாக்கணப் பாட்டு கட்டபொம்மன் படத்தில் பிரசித்தம்! அதையும் தாண்டி காங்கிரஸ் கட்சியில் சோனியா வாரிசுகள் ராஜினாமா செய்ய முன்வருகிற மாதிரி ஒரு நாடகமும் காங்கிரஸ் காரியகமிட்டி உறுப்பினர்கள் எல்லாம் கூடி ஒரு ஒப்பாரி வைத்து அதை நிராகரிப்பதுமான நாடகம் இன்று காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது என்பதில் முக்கியமான விஷயம் சோனியா குடும்பத்திடம் குவிந்து கிடக்கிற ஊழல் பண பலம் என்பது எத்தனைபேருக்கு இங்கே தெரிந்திருக்கும் என்பது எனக்கு நிஜமாகவே தெரியவில்லை. காரணமே இல்லாமல் ஒரு கும்பல், அங்கே அடிமைகளாகவும் பல்லக்குத் தூக்குபவர்களாகவும் இருக்குமா? ஆக சோனியா வாரிசுகளின் மீது எத்தனை விசுவாசம் என்பது அவரவருக்கு வரும்படியைப் பொறுத்தது மட்டுமே என்பது நிஜம்.
அடடே! மதி வரைந்த பொருள்நிறைந்த கார்டூன் ஒன்றை நேற்றே பார்த்தேன். ஆனால் பதிவில் சேர்க்க முடியவில்லை என்பது மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
தமிழகம், கேரளாவில் இன்னமும் குப்பைகள் அகற்றப் படவில்லை என்பது வருத்தம் தரக் கூடியதுதான்! ஆனால் காங்கிரசில் கண்துடைப்புக்காக நடந்த மாதிரிக் கூட இங்கே தமிழக பிஜேபி நிர்வாகிகள் எவரும் தோல்விக்காகப் பொறுப்பேற்கவோ ராஜினாமா செய்ய முன்வரவோ இல்லை என்பது இன்னும் அதிக உறுத்தலாக!
இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத்தாண்டி வேறுசில முக்கியமான மாற்றங்களும் நடக்கவிருக்கிறது. 2020 நவம்பரை ஒட்டி ராஜ்ய சபாவில் 75 இடங்களுக்கான தேர்தல் நடக்கவிருப்பதில் பிஜேபி தலைமையிலான NDA 19+ இடங்களைப் பெற்று சபையில் மெஜாரிடியைப் பெறுகிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மை பெறுவதன் விளைவாக கடந்த ஐந்தாண்டுகளில் காங்கிரசும் கூட்டாளிகளும் ராஜ்யசபாவில் போட்ட ஆட்டங்கள் இனிமேல் நடக்காது.
இங்கே தமிழகத்தில் என்ன நிலைமை?
திமுகவின் கனிமொழி, அதிமுக தயவில் CPI கட்சியின் D ராஜா அதிமுகவின் மைத்ரேயன் மூவருடைய பதவிக்காலமும் முடிவடைவதில் இப்போது கனிமொழி மக்களவைக்குத் தேர்வாகி விட்டார். சட்டசபை உறுப்பினர்களுடைய எண்ணிக்கை அடிப்படையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் தலா 3 பேரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும் என்ற நிலை. ஏற்கெனெவே திமுக ஒப்புக் கொண்டபடி மதிமுகவின் வைகோவுக்கு ஒரு இடம், காங்கிரஸ் கோரிக்கை ஏற்கப்பட்டால் மன்மோகன் சிங் இந்த முறை தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குப் போகலாம்! வலது கம்யூனிஸ்ட் கட்சியின் D ராஜா இதுவரை திமுக, அதிமுக என்று இரு கழகங்களின் தோள்மீதேறி அனுபவித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ஒரு முடிவு வருகிறது.
அதிமுக தரப்பில் பாமகவுக்கு, ஒப்புக்கொண்டபடி 7+1 என்பதில் தர்மபுரியில் தோற்ற அன்புமணிக்கு வாய்ப்பு தரப்படுமா அல்லது தட்டிக்கழிக்கப்படுமா என்பது இனிமேல்தான் தெரியவரும். பாமகவுடன் கூட்டணி வைத்ததில் அதிமுகவுக்கு கிடைத்தது பூஜ்யம் என்கிற நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
இது எந்தக் கேரளப்பத்திரிகையில் வந்ததோ தெரியாது! இடதுசாரிகள் இனிமேல் ஜோசப் ஸ்டாலின் படத்தைக் கழற்றிவைத்துவிட்டு முக ஸ்டாலின் படம் வைத்து வாழ்த்து கோஷம் போடுகிற மாதிரி!
அப்படியே மார்க்ஸ் ஏங்கல்ஸ் என்று பிதற்றித் திரிவதை விட்டுவிட்டு கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி காவியத்தைப் பாராயணம் செய்யவேண்டும் என்று சொல்லாமல் விட்டார்களே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!