காங்கிரஸ், உதிரிக்கட்சிகளுடைய கலகம் என்ன ஆயிற்று?

இந்தத் தேர்தலின் முத்தாய்ப்பாக, ரொம்பவுமே  தவ்விக் குதித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளுடைய கலகக் குரலை அடக்கிவைத்தது எதுவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்? உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் இப்படி எல்லா விஷயங்களிலும்  பழிசுமத்தி, கலகம் செய்யவும் தயாராக இருந்த கட்சிகள், இப்போது தேர்தல் முடிவுகளுக்குத் தலைவணங்கி, தோல்வியை ஒப்புக் கொள்கிற நிலைமை எப்படி வந்தது?  


முதலில் ராகுல் காண்டி முன்னெடுத்த சௌகிதார் சோர் ஹை முதலான ஊழல் சேற்றை வீசிய பிரசாரம் முழுக்க முழுக்க ஜனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது: குற்றம் சொன்னவர்களையுமே ஜனங்கள் நிராகரித்திருக்கிறார்கள்.  

காங்கிரஸ் இந்திரா குடும்ப முகங்களைத் தவிர வேறொன்றும் அறியாத அமேதி தொகுதி மக்கள், இந்த முறை பிஜேபியின் ஸ்ம்ருதி ஈரானியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது  ஒரு முத்தாய்ப்பு. ஸ்ம்ருதி சொன்னது போல முடியாதது என்று எதுவுமே இல்லை. அடுத்தது அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதிக் கட்சியும் மாயாவதியின் BSPயும் 25 ஆண்டுகாலப் பகைமையை மறந்து ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியும் உத்தர பிரதேசத்தில் எடுபடவில்லை.


அடுத்து காங்கிரசோ பிஜேபியோ எந்தத்தரப்பு ஜெயித்தாலும் அதைத் தங்களுடைய அரசியல்  ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ளவும் ஆதரவளிக்கவும் தயாராக இருந்த YSR காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி போன்ற சிலருக்கும் இந்தத் தேர்தல்முடிவுகள் மிகத்தெளிவான பதிலை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆந்திராவுக்கு விசேஷ அந்தஸ்து ஒரிசாவுக்கு விசேஷ அந்தஸ்து என்ற கோரிக்கையை முகமூடியாக வைத்து அரசியல் செய்ய முயன்ற TDP யின் சந்திரபாபு நாயுடு, YSR காங்கிரசின் ஜெகன், பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் மூவரும் அந்த வகையைச் சேர்ந்தவர்கள். இதில் ஜெகன் மோகன் ரெட்டி (முதல்முறையாக) நவீன் பட்நாயக் (ஐந்தாவது முறையாக) மாநில ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.  


ஆந்திராவில் ஜெயித்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு, பிஜேபியை நிர்பந்தித்துத் தனக்கு சாதகமாக எதையும் சாதித்துக் கொள்ள முடியாது என்பது ஒரு விதமான நகைமுரண் என்றால் அவரிடம் தோற்றுப்போன சந்திரபாபு நாயுடு நிலைமை மிகப் பரிதாபமானது. ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அவர்மீது பகைமை கொண்ட அரசுகள், (அரசு அதிகாரிகள் பலரையும் நாயுடு பகைத்துக் கொண்டிருக்கிறார்)    ஊழல்புகார்களில் அவரைச் சிக்க வைக்கலாம்! கடந்தகாலத்தில்  YSR காங்கிரசின் 23 சட்ட மன்ற உறுப்பினர்களைக் கட்சி மாற வைத்ததுபோல இப்போது அவருக்கே நடக்கலாம்! கட்சியைக் காப்பாற்றிக்  கொள்வதும், தன்மீதான ஊழல் புகார்களை எதிர்கொள்வதும் சந்திரபாபு நாயுடுவுக்கு பலத்த சோதனைதான்! 

கொஞ்சம் தமிழக உதிரிகளையும் பார்க்கலாமா?

   
கமெண்டுகளை நீங்களே எழுதிக்கொள்ளலாம்.

     
இந்தத்தேர்தலில் இடதுசாரிகளின் பரிதாபமான முடிவை நாலைந்து பாராக்களில் சொல்லிவிட முடியாது. மே.வங்கத்தில் ஒருவிதமாக, கேரளாவில் இன்னொருவிதமாக தமிழகத்தில்  திமுகவுக்குப் பக்க வாத்தியமாக என்று பலவித  முகங்களோடு, சரிவைச் சந்தித்திருக்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து இந்தப்பக்கங்களில் பேசலாம்.

மீண்டும் சந்திப்போம்.
    

6 comments:

 1. "எங்கள் குடும்பத்திலேயே ஒன்பது பேர் ஸார்..."

  ஐந்து வாக்குகள் மட்டுமே பெற்ற அந்த பஞ்சாப்(தானே?) வேட்பாளர் செய்தி படித்தீர்களா?

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஸ்ரீராம்! இதுமாதிரிச் செய்தியெல்லாம் trivia ஒரு துணுக்கு எழுத அல்லது கார்டூன் போட வேண்டுமானால் உதவலாம்! ஒரு முழுநீளப்பதிவு விமரிசனங்களோடு எழுதப்பயன்படாது என்பதால் சட்டை செய்ததில்லை . தவிர இவைகளை பொதுமைப்படுத்தி விடவும் முடியாதென்பது இன்னொரு குறை

   Delete
 2. பாவம் இடதுசாரிகள். கொள்கையில்லாத கட்சிகளில் அதுவும் ஒன்று. நாளை, மேற்கு வங்கத்தில் அவர்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர்களுக்கு மே.வங்கத்தில் மம்தா எதிரியா இல்லை பாஜகவா என்பதே பெரும் குழப்பம்.

  ஒரு காலத்தில் கொள்கை என்பது மட்டுமே அவர்கள் மூச்சாக இருந்தது. அதன் தலைவர்கள் மக்களுக்கு உழைத்தனர், தங்களுக்கு ஒன்றும் செய்துகொள்ளவில்லை....

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத்தமிழன்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கை இருந்தது. பிரதான எதிரி யார் என்பதில் தான் மார்க்சிஸ்ட்டுகள் அடிக்கடி குழப்புவார்கள், மாற்றிக் கொள்வார்கள்! முந்தைய நாட்களில் காங்கிரஸ் வர்க்க எதிரியாகப் பார்க்கப்பட்டது மாறி மதவாதசக்திகள் என்றானது. அதனால் காங்கிரசுடன் கூட்டு என்பது பாவமில்லை என்றானது. வங்கத்தில் மம்தா பானெர்ஜி தான் ஒட்டுமொத்த எதிரியாகத் தெரிவதில் பிஜேபி வெற்றிக்காகக் களமிறங்கி வேலை செய்தது கூடப் பாவமில்லை என்றாகியிருக்கிறது.

   வலது கம்யூனிஸ்ட்டுகள் மார்க்சிஸ்டுகள் மாதிரி தத்துவம், கொள்கை, நடைமுறை உத்தி என்றெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. சோறு கண்ட இடமே சொர்க்கமென்று ஒதுங்கி அறுபது ஆண்டுகாலம் நெருங்கப்போகிற தருணத்தில் கொள்கை என்பது மட்டுமே அவர்கள் மூச்சாக இருந்தது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாகச் சொல்லிக் கிச்சுகிச்சு மூட்டாதீர்கள்!

   Delete
  2. இடது கம்யூனிஸ்டுகள் என்று சொல்லியிருக்கணும்

   Delete
  3. அட ஆமால்ல! ஆனால் இடதுசாரித்தன்மையை இழந்து வருபவர்களை இடது கம்யூ. என்று எப்படிச் சொல்வதாம்?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!