இங்கே பதிவுகளில் நம்முடைய கவனம் தேவைப்படுகிற செய்திகளாகத் தெரிவுசெய்துதான் கொஞ்சம் தரவுகளோடு எழுதிக் கொண்டிருந்தாலும், கொடுக்கப்படும் தரவுகளை நண்பர்கள் பார்க்கிறார்களா, யோசிக்கிறார்களா, கூடுதல் விவரங்களைத் தேடுகிறார்களா என்ற விவரங்களைத் தெரிந்து கொள்கிற வாய்ப்பில்லாமல் இருப்பது எனக்கிருக்கும் மிகப்பெரிய மனக்குறை. இன்றைக்கு புதிய தலைமுறை சேனலில் ஒரு முக்கியமான விஷயம் கவனப் படுத்துகிற விதத்தில் விவாதத்துக்கு வந்தது ஒரு நல்ல விஷயம். ஆனால் ஒரு சினிமா நடிகர் கோபப்பட்டுப் பேசினார் என்பதற்காகவே, அதை ஒரு விவாதமாக நடத்துகிற போது அதை என்னமாதிரி எடுத்துக் கொள்வது?
இந்த விவாதம் ஒருமுக்கியமான உருப்படியான விஷயத்தின் மீது நம்முடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது என்பது மட்டுமே சேனல் செய்திருக்கிற ஒரே நல்ல விஷயம் என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்.
புதிய கல்விக் கொள்கை 2019 என்று ஒரு முன்வரைவு மத்திய அரசால் பொதுமக்களுடைய கருத்துக்களைக் கேட்டு பொதுவெளியில் வைக்கப்பட்டிருப்பதை நண்பர்கள் எத்தனைபேர் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? எத்தனைபேர் இணையதளத்தில் தரவிறக்கம் செய்து வரைவு அறிக்கையை வாசித்துப் பார்த்திருக்கிறீர்கள்? ஆங்கிலம் ஹிந்தியில் தானே இருக்கிறது எப்படி வாசிப்பது என்று எத்தனைபேர் தயங்கி இருப்பீர்கள் என்பதற்கான விடை எனக்குத் தெரியும். வலைப் பதிவுகள், வலைக்குழுமங்கள் என்று கொஞ்சம் ஆர்வமாக இயங்க ஆரம்பித்த பாட்களில் அறிமுகமான இளம்நண்பர் உமாநாத் செல்வன் என்கிற விழியன்! சிலநண்பர்களோடு சேர்ந்து இந்த வரைவறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புள்ள பாரதி புத்தகாலயம் தன்னுடைய வலைத்தளத்தில் 453 பக்கம் உள்ள இந்தத் தமிழ் வரைவை ஏற்றி வைத்திருக்கிறது. இங்கே இதன் மீதான கோப்புக்களைத் தரவிறக்கம் செய்து கொள்கிற மாதிரி
தேசிய கல்விக் கொள்கை வரைவினை ஒட்டி வெளி வந்துள்ள கோப்புகள் https://vizhiyan.wordpress.com/2019/07/14/dnep-links/
நடிகர் சிவகுமார் குடும்பம் அகரம் பௌண்டேஷன் என்று ஒரு அறக்கட்டளையை நடத்திவருவதில், புதிய கல்விக் கொள்கை பற்றி அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உமாநாத் செல்வன் என்கிற விழியன் பேசியதைக் கொஞ்சம் பாருங்களேன்! 25 நிமிடம். இது உட்பட இன்னும் பல இடங்களில் விழியன் பேசியதன் யூட்யூப் சுட்டிகள் இங்கே
தேசிய கல்விக் கொள்கை பற்றி விழியன் பேசிய உரைகளில் தொகுப்பு https://vizhiyan.wordpress.com/2019/07/14/vizhiyan-talks-on-dnep/
இந்தச் சுட்டிகளைத் தந்து, இந்தப் புதிய கல்விக் கொள்கை மீதான ஒருபார்வையை, அனைவரும் பங்குகொண்டு ஒரு கருத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக உழைத்துவரும் விழியன் என்கிற உமாநாத் செல்வனுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கவேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை! நன்றி விழியன்!
எது பொருளோ அதைப் பேசுவோம்
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!