ஞாயிறு மாலை! திரும்பிப் பார்க்கிறேன்!

வழக்கமான அரசியல் செய்திகளையே தொடர்ந்து தொகுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதிலிருந்து விலகிக் கொஞ்சம் வித்தியாசமாக என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே இன்றைய பகல் பொழுது முழுக்க ஓடி விட்டது. அதனால் 2009 இல் எழுதிய ஒரு பதிவையே,  இன்றைக்கும்  அங்கு சொல்லப்பட்ட விஷயம் பொருத்தமாக இருப்பதால்  இங்கு மீள்பதிவாக.

வால் நீளமாக இருப்பது நல்லது!


சேத் கோடின் எழுதியிருக்கும் இன்றைய பதிவைப் படித்துவிட்டு யோசித்துப் பார்க்கும் போது , இதுவரை புதுவருடத் தீர்மானங்களைப் பற்றிப் பேசிய விஷயங்களுக்கு, ஒரு சுவாரசியமான திருப்பம் தெரிகிறது.  கொஞ்சம் உறுதியோடு செயல்படுத்த முடிந்தால், ஒரு திருப்புமுனையையே எதில்வேண்டுமானாலும்  ஏற்படுத்திவிட  முடியும் என்ற நம்பிக்கைக் கீற்று பளிச்சிடுகிறது! 

கெவின் கெல்லி என்பவருடைய இந்தப் பதிவு, தன்னுடைய சிந்தனையைப் புரட்டிப் போட்டு விட்டது என்று சேத் கோடின் ஆரம்பிக்கிறார்.

ஆயிரம் நண்பர்ளை, உங்களைப் பின்தொடர்பவர்கள், உங்களுக்காக எது  வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பவர்களாக உங்களால் பெற முடிந்தால், என்னென்னவோ சாதிக்க முடியும்! 

அப்படி என்றால் என்ன அர்த்தம்?

இந்த ஆயிரம் என்னென்னவெல்லாம் சாதிக்கும்?

உங்களை உண்மையாகவே பின்தொடரும் இந்த ஆயிரம் பேர், நீங்கள் எது சொன்னாலும் காதுகொடுத்துக் கேட்பார்கள், நீங்கள் என்ன கனவுகளை விற்க முயற்சித்தாலும் தயங்காமல் வாங்கிக் கொள்வார்கள். தனக்கொரு பாதை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான் என்று பாட்டுப் பாடாமலேயே உங்கள் பின்னால் வரத் தயாராக இருப்பார்கள்.

ஆக எந்த ஒரு பெரிய சாதனை, முயற்சி, வெற்றி என்று சொல்லப்படுவதற்குப் பின்னால், இந்த மாதிரி ஆயிரம் உண்மையான பின்தொடர்ந்துவரும் நண்பர்களைச் சம்பாதிப்பதில் தான் ஆரம்பமாகிறது. ஆயிரம் என்பது ஒரு எண்ணிக்கை. இப்படிப்பட்டவர்களை உங்களோடு இணைத்துக் கொள்வதில் இருந்துதான், அவர்கள் நீங்கள் காட்டும் பாதையை ஏற்றுக்கொள்வதும், உங்களோடு கூட வருவதுமான வெற்றிப் பயணம் ஆரம்பிக்கிறது. 

கெவின் கெல்லி தன்னுடைய பதிவில் இப்படி ஆரம்பிக்கிறார்:

"வால் நீண்டு கொண்டே போவது இரண்டு  விதமான தரப்பை ரொம்பவுமே மகிழ்ச்சியடையச் செய்யும். அதிர்ஷ்டக்காரர்களான சந்தையைக் கைப்பற்றுகிறவர்கள், சந்தையில் வாங்குகிறவர்கள் இப்படி இரண்டு தரப்பையுமே!"


வரப்புயர நீர்  உயரும்னு தானே நாமெல்லாம் படிச்சிருக்கோம்! கெவின் கெல்லி கொஞ்சம் வித்தியாசமா, வால் நீள, தலை நிமிரும்னு சொல்லியிருக்காரு! படத்தைப் பாருங்க!வாலைத் தேடவேண்டாம்!

இங்கே கெவின் கெல்லி சொல்வது தலை-வால் என்ற இரண்டு அம்சத்தைப் பற்றி! வேறு எதனோடும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!

இப்படி ஆயிரம் உண்மையான நண்பர்களைச் சம்பாதிப்பது, முடியக் கூடிய ஒரு விஷயம் தான்! ஒரு நாளைக்கு ஒன்று என்று ஆரம்பித்தால் கூட உங்களால், மூன்று வருடங்களுக்குள் இந்த இலக்கை எட்டி விட முடியும்.

அவர்களுடைய நம்பிக்கையைப் பெறுகிற விதத்தில் உங்களுடைய தயாரிப்பு இருக்க வேண்டும்! இங்கே உதாரணத்துக்கு வலைப்பதிவுகளையே எடுத்துக் கொள்வோமே, அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வழியைக் காட்ட உங்களால் முடியும் என்றோ, அவர்களுக்கு பயன் படுகிறவிதத்தில் உங்களுடைய பதிவுகளை அவர்களை அடையாளம் கண்டு கொள்கிற மாதிரியோ ஆரம்பித்து, அந்த நம்பிக்கையைத் தொடர்ந்து காப்பாற்றிக் கொள்ளவும் உங்களால் முடியுமானால், ஆயிரம் பேர் மட்டுமல்ல இன்னும் அதிகமாகவே உங்களைப் பின்தொடரத் தயாராக இருப்பவர்களாக மாற்ற முடியும்!

இப்படி உண்மையான நண்பர்கள் கிடைப்பது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். இந்த மாதிரி நண்பர்களை சந்தோஷப்படுத்துவதே கூட ஒரு சந்தோஷகரமான அனுபவமாகவும், வாழ்க்கைக்கு உயிரூட்டுவதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு செங்கல்லாகத் தான் அடுக்குமாடிக் கட்டடம் எழும்புகிறது. உண்மையான நண்பர்களைப் பெறுவதுமே கூட ஒவ்வொன்றாகத் தான் தொடங்குகிறது. சின்னச்சின்னத் துளிகளாகப் பொழியும் மழை, பெரு வெள்ளமாக மாறுகிறது!   பசுமை தழைக்க வழிசெய்கிறது! உயிர்கள் நிறைவு பெறுவதும், திருப்தியடைவதும் இப்படித்தான் ஆரம்பமாகிறது!

புது வருடத் தீர்மானங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பது, உங்களுடைய உடனடித் தேவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப் படும்போது தான், எதைத் தீர்மானிப்பது, எப்படிச் சாதிப்பது என்ற குழப்பம், ஏதோ ஒன்றுக்காக இன்னொன்றைத் தியாகம் செய்ய வேண்டிய சூழல் என்றெல்லாம்வருகிறது.

உண்மையான அணுக்கமான நண்பர்களை, ஒருவருக்கொருவர் உதவியாக, ஆதூரமாக, ஆதரவான வார்த்தைகளின் வழியாகவே பதிவுகளில் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்கிறபோது, ஒருத்தருக்கொருத்தர் வெறுப்பை வளர்த்துக் கொண்டு, வசவுகள், காயம்பட்ட மனங்கள் என்று இருக்க வேண்டிய அவசியம் தான் என்ன? வாதங்கள் பிடிவாதங்களாக இறுகிப்போய் விடாமல், இளக்கம் வேண்டும்! இணையம்இதயங்கள் இணைவதற்காகவே!  

நல்ல எண்ணங்களை விதைத்தல், வெறும் கோஷமாகவோ உபதேசமாகவோ நின்று விடாமல், தமிழ்வலைப்பதிவுகளில் வளர வேண்டும் என்பது வெறும் ஆசையாக மட்டும் இருந்தால் போதுமா? வார்த்தைகளில் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே போதுமா?

செயல்படுத்தும் வாய்ப்பும், பொறுப்பும் நம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது! நம்மிடமிருந்தே  இந்த ஆயிரத்தில் ஒன்று ஆரம்பிக்கிறது!

சேத் கோடின் அதைத் தான் ஆயிரம் என்ன செய்யும் என்பதாகச்  சொல்கிறார்! முதலில் ஆயிரத்தைச் சம்பாதிக்க ஆரம்பிப்போம்!

     
பழசுதானே என்று அலுத்துக் கொள்ளாமல் கடைசிவரை படிக்க முடிகிறதா? உபயோகமாக இருக்கிறதா? 

 மீண்டும் சந்திப்போம். 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!