எட்கர் ஆலன் போ! Stonehearst Asylum! அதிரன்!

குடும்பம் ஒரு கதம்பம் திரைப்படத்தில் விசு பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டருக்கே.............. என்று ஆரம்பித்து கேட்கிற கேள்வி அந்தநாட்களில் ரொம்பவுமே பிரபலம்!  நினைவு இருக்கிறதா? விசு பேசுகிற  அதே மாதிரி ஒரு சிச்சுவேஷனில் எட்கார் ஆலன் போ என்கிற  ஒரு அமெரிக்கக் கதாசிரியர் "The System of Dr. Tarr and Prof. Fether" என்றொரு கதை எழுதியிருப்பது Stonehearst Asylum என்கிற திரைப் படத்தைப் பார்க்கிற வரை தெரியாது. 1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும் பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை.Netlix இல் இந்தப் படம் ஸ்ட்ரீமிங் ஆகக் கிடைக்கிறது . எதற்கு அது வேண்டாமே என்றால்  இணையத்திலேயே பார்க்கவும் இங்கே கிடைக்கிறது. 

1890 களில் இங்கிலாந்தில் விக்டோரியா ராணி காலத்துப் பின்னணியில் ஒரு மனநலக் காப்பகத்தை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். மனநலம் பிறழ்ந்தவர்களுக்கு அந்த நாட்களில் அளிக்கப்பட்ட கொடூரமான சிகிச்சைமுறைகள் கொஞ்சம் கோடிட்டுக் காட்டப் பட்டாலும்  பயமுறுத்துகிற படமாக எல்லாம் இல்லை. No one is what they seem!என்ற catchphrase உடன் தொடங்குகிற படம் 112 நிமிடங்கள், கொஞ்சம் கூட விறுவிறுப்புக் குறையாமல் போகிறது.  

ஒரு வகுப்பறையில் மனநலம் பிறழ்ந்தவர்கள் பற்றியான லெக்சருடன் திரைப்படம் தொடங்குகிறது. எலைசா கிரேவ் என்கிற புத்திசுவாதீனமற்ற இளம் பெண்ணை வகுப்பறைக்கு அழைத்து வந்து அவளுடைய கேஸ் விவரிக்கப் படுகிற நேரத்திலேயே அவள் தனக்கு ஒன்றுமில்லை, காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறாள். ஒருவிதமான வலிப்புடன் அவள் மயக்கமுற பிரெண்டன் க்ளீசன் (நடிகர்)  அந்த நோயாளியைப் பற்றிக் கொஞ்சம் சொல்வதுடன் காட்சி முடிகிறது.

கிறிஸ்துமசை ஒட்டி பனிப்பொழிவில் ஸ்டோன்ஹெர்ஸ்ட்  அசைலம் அடுத்த காட்சியாக விரிகிறது. எட்வர்ட் நியூகேட் என்கிற மருத்துவர்  வசதி படைத்தவர்களுக்கான இந்த மனநலக்காப்பகத்தை நடத்தி வரும் டாக்டரிடம் அவருடைய சிகிச்சை முறைகளைத் தெரிந்து கொள்வதற்காக வந்து சேர்கிறார். முதல் காட்சியில் அறிமுகமான எலைசா கிரேவ் அங்கே இருக்கிறார். டாக்டர் சிலாஸ் லாம்ப் கொஞ்சம் புரட்சிகரமான சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார். தன்னை ஒரு குதிரையாகக் கற்பனை செய்து கொள்ளும் ஒரு வசதி படைத்தவர், உறவினர்களுக்கோ சங்கடம் ஆனால் இந்தக்காப்பகத்தில் அப்படியே இருக்கும் சுதந்திரம். கதாநாயகியின் கதையும் அதே போலத்தான். எலைசா கிரேவுக்கு பியானோ வாசிப்பதில் ஈடுபாடு, எவ்வளவு நேரம்ஆனாலும் வாசித்துக் கொண்டிருக்க அனுமதிக்கப் படுகிறார். இப்படியே ஒவ்வொரு நோயாளிக்கும் அவரவர் இஷ்டப்படியே நடந்து கொள்ள சுதந்திரம்! மருத்துவர் எட்வர்ட் நியூகேட் நோயாளி எலைசா கிரேவ் மீது மையல் கொள்கிறார்.

அடுத்து முதல் திருப்பமாக முதலில் டாக்டர் சால்ட் வசமிருந்த அந்தக் காப்பகம் டாக்டர் சிலாஸ் லாம்ப் வசமாகிவிட்டதும் டாக்டர் சால்ட் உட்பட அவருடைய உதவியாளர்கள் எல்லோருமே கீழே பாதாள கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதும் எட்வர்டுக்குத் தெரிய வருகிறது. டாக்டர் சிலாஸ் லாம்ப் அங்கே சிகிச்சை பெற்று வந்த மனநோயாளி என்பதும் தெரிய வருகிறது.கீழே அடைபட்டிருப்பவர்களை விடுவிக்க எட்வர்ட் உதவுவதாக முடிவு செய்து எலைசாவிடம் அவளுடைய ஒத்துழைப்பையும் கேட்கிறார்.  முதலில் அவரை நம்ப மறுக்கும் எலைசாவிடம்  எட்வர்ட் அவளிடம் காதலில் விழுந்தே தேடி வந்ததாகச் சொல்கிற கட்டம் நன்றாக இருக்கிறது.

இதற்கிடையே கீழே அடைப்பட்டிருந்தவர்களில் இருவர் வெளியே தப்பித்துச் செல்கையில் டாக்டர் சிலாஸ் லாம்பின் ஆட்கள் ஒருவரை சாகவிட்டு, இன்னொருவரைத் திரும்பக் கொண்டுவருகிறார்கள். கதாநாயகன் எட்வர்டும் வில்லன்களிடம் சிக்கிக் கொண்டு எலெக்ட்ரிக் ஷாக் ட்ரீட்மெண்டுக்குத் தயார் செய்யப்படுகையில் கதாநாயகியின் உதவியோடு தப்புகிறார் டாக்டர் சால்ட் ஆக இதுவரை  இருந்த சிலாஸ் லாம்ப்  பழையபடியே மனநோயாளியாக!

இப்போது, க்ளைமாக்சில் எதிர்பாராத அடுத்த திருப்பம்!. இந்தக் காப்பகத்தை பரிசோதிக்க டாக்டர் எட்வர்ட் நியூகேட் என்று சொல்லிக்கொண்டு ஒரு உதவியாளருடன் இன்னொருத்தர் வந்து சேர்கிறார் அப்படியானால்,முதலில் வந்த எட்வர்ட் நியூகேட் யார்,கதாநாயகியை முதன்முதலில்  எங்கே எப்படிப் பார்த்தார் எப்படிக் கண்டவுடன் காதல் வந்து தேடிக்கொண்டு வந்தார் என்பது ரொம்பவும் சுவாரசியமாகச சொல்லப் பட்டிருக்கிறது இந்த ஒரு சுவாரசியமான திருப்பத்துக்காகவே இந்தத் திரைப் படம் எனக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது என்று நினைக்கிறேன் படத்தைப்  பார்த்துவிட்டு அது சரிதானா என்பதை நீங்களும் கொஞ்சம் சொல்லுங்களேன்!  என்று சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது 2010 ஏப்ரலில்!

இப்போது எதற்கு அந்தப் பழைய கதை, பதிவு பற்றி எல்லாம்?

  
அதிரன் என்ற பெயரில் ஃபகத் ஃபாசில், சாயி பல்லவி, சீனிவாசன் நடித்து  Stonehearst Asylum படத்தைக் காப்பியடித்து  ஒரு மலையாளக் காவியத்தை நேற்றுத்தான் பார்த்தேன். யூட்யூபிலேயே முழுப்படமும் காணக்  கிடைக்கிறது. கதையை localise செய்வதற்காக சாயி பல்லவியை ஆட்டிசம் பாதித்த  பெண்ணாக, தந்தையால் களரிப் பயிற்சி அளிக்கப்பட்டவளாக, எலைசா கிரேவ் பாத்திரத்தில்! டாக்டர் சிலாஸ் லாம்ப் பாத்திரத்தில் அதுல் குல்கர்னி, (ஒரிஜினல் படத்தில் இருந்த மாதிரி நோயாளியே டாக்டரைச் சிறையில் வைத்து தான்  டாக்டராக மாறிவிடுகிற மாதிரி எல்லாம் இல்லை) என்று கொஞ்சம் கொஞ்சம் மாற்றி எடுத்திருந்தாலும் மலையாளிகள் இப்படியெல்லாம் சுயமாக சிந்தித்துத் திரைக்கதை எழுதுகிறவர்கள் இல்லையே என்று சொல்வதற்காகவா இந்தப்பதிவு? இல்லை!

2018 நவம்பரில் போட்டோஷூட் ஆரம்பித்து 55 நாட்களில் படத்தை எடுத்துவிட்டார்கள்! அதுவும் நமக்குத் தெரியுமே, பார்த்திருக்கிறோமே என்றெல்லாம் குறை சொல்ல விடாமல் ஊட்டியிலேயே ஒரு thriller படத்துக்குண்டான கெத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாத படப்பிடிப்பு.. ஜனவரி 2019 இல் படப்பிடிப்பு முடிந்தாலும்    , ரிலீசானதென்னவோ ஏப்ரலில்தானாம்!

சாயி பல்லவி! இந்த இளம் நடிகை, படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டிக் கொண்டே வருகிறார் என்பது இதிலும் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. உடலை வில்லாக வளைக்கிறார்! மாரி 2 இல் பாடல் ஆட்சிக்காக என்றால் இந்தப் படத்தில் களரிப் பயிற்சி பெறுபவராக! ஆட்டிச பாதிப்பைக் கொஞ்சமும் மறக்காத உடல்மொழி என்பதையும் சேர்த்துப்பார்த்தால், இந்தப்படத்தில் நம்பர் 1  
ஆக சாயி பல்லவி! 

ஃபகத் ஃபாசில், சீனிவாசன் நடிப்பைப் பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதே இல்லை. ரேணுகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கும் லீனா  scope  இல்லை என்றாலும் நிறைவாகச் செய்திருக்கிறார். கடாரம் கொண்டானில் வெறுமனே வந்துவந்துபோகிற பாத்திரம் மாதிரி இதில் கேவலப் படவில்லை. இருந்தாலும் ஒரு கேள்வி இன்னமும் மனதை நெருடத்தான் செய்கிறது. ஒரு படம் அல்லது கதையைப் பார்த்து அது கொடுக்கும் உந்துதலில் (inspiration) படம் எடுப்பது ஒருவிதம்! கதையைத் தழுவி உள்ளூர்க் களத்தில் எடுப்பது இன்னொருவிதம்! இந்த இரண்டு விதமாகவும் இல்லாமல் அப்படியே காட்சிக்கு காட்சி காப்பியடித்து, உள்ளூருக்காகத் தயார் செய்வதாக கொஞ்சம் ஏமாற்றுவேலைகளும் செய்வது என்ன மாதிரியான போக்கு?  

கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
          

   .         

2 comments:

  1. ஜாக் நிக்கல்சனின் அருமையான நடிப்பில் வந்த one flew over the cuckoo's nest படத்தை தமிழ் 'படுத்தி' எடுத்த 'மனசுக்குள் மத்தாப்பு' ஞாபகம் வருகிறது. நடித்த எல்லோருமே அதை மறக்க நினைக்கும் அளவு அந்த படம் இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. அதைக் கூட மலையாளத்தில் தலவட்டம் என்று முதலில் எடுத்ததன் ரீமேக் ஆக இரண்டு வருடங்கள் கழித்து எடுத்தார்கள் ,100 நாள் படம் என்று சொல்வார்களே! நான் சொல்லவந்தது,ஒரு கதை அல்லது படத்தைப் பார்த்து nspire ஆகிப் படம் எடுப்பதற்கும், அச்சு அசலாக ஒவ்வொரு காட்சியையும் காப்பியடித்து எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மட்டும் தான்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!