தலைப்புச்செய்தி! #அரசியல்இன்று இதுவரை!

ஒருவழியாக, உச்சநீதிமன்றம் கர்நாடக காங்கிரஸ் கட்சி ஏற்படுத்திய  அரசியல் குழப்பங்களுக்கு, தெளிவாக  ஒரு நல்ல முடிவைச் சொல்லி இருக்கிறது. ராஜினாமா செய்து உச்ச நீதிமன்றத்தை நாடிய 10 MLA க்களும் இன்று மாலை 6மணிக்கு பெங்களூரில் சபாநாயகர் முன் ஆஜராகி மீண்டும் தங்களுடைய ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும், கர்நாடக போலீஸ் DGP அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும், சபாநாயகர் அவர்களை உடனடியாக சந்திப்பதோடு தனது முடிவை நாளைக்குள், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னால் தெளிவான காரணங்களுடன் அறிவித்து விடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தை நாடிய 10 MLA க்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றாலும் ராஜினாமா முடிவில் இருக்கும் வேறு சிலரும் உச்சநீதி மன்றத்தை நாடி இதேபோல நிவாரணம் பெறமுடியும் என்பது முதல் நல்ல விஷயம்.  


சபாநாயகருடைய முடிவு, அது என்னவாக இருந்தபோதிலும், உச்சநீதிமன்றத்தின் பரிசீலனைக்குட்பட்டதாக இருப்பது அடுத்த நல்ல விஷயம். இங்கே சில ஊடகங்கள் உளறியது போல அதிமுக வழியைப் பின்பற்றும் காங்கிரஸ் என்பதோ, சபாநாயகர், காங்கிரஸ் விரும்புகிற மாதிரி மட்டும் செயல்பட முடியும் என்பதோ அல்லாமல், நீதிமன்றத்தின் பார்வையில் எது சரியோ அது மட்டுமே நிற்கும் என்பது தெளிவாக்கப் பட்டிருப்பது அடுத்த நல்ல விஷயம். சபாநாயகருடைய வானளாவிய அதிகாரம் என்பது வெறும் கற்பனைதான் என்பது தெளிவாக்கப்பட்டிருப்பதை நண்பர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். நடக்கப் போவது என்ன என்பது தெளிவாகப் புரிந்தாலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி இப்போது எதற்காக நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஊடகங்களிடம் வீராப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது கர்நாடக அரசியலின் புரையோடிப் போன ஊழல் அரசியல்! காங்கிரஸ்காரனைப் பற்றித்தனியாக சொல்லவே வேண்டாம்! கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி மீண்டும் வரவிடாமல் விரட்டியடித்தாலும் கூட  பதவி, நாற்காலியைப் பார்த்து நாக்கைத் தொங்க விட்டு அலைகிற கூட்டம்! 
     

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை உதறிவிட்டு பிஜேபிக்கு,    தெலங்கானாவில் காங்கிரஸ் MLAக்கள் ஆளும் TRS கட்சிக்குத் தாவிய    மாதிரியே கோவாவிலும் காங்கிரஸ் கட்சி ஆவியாகிக் காற்றோடு கலந்து விட்டதாம்!  அங்கே இருக்கிற 15 காங்கிரஸ் MLA க்களில் 10 பேர் காங்கிரசை உதறிவிட்டு பிஜேபிக்குத் தாவிவிட்டார்களாம்! ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் ஒரு பக்கம், சரியான அரசியல் பாதையைக் கண்டு செயல்பட  முடியாமல் காங்கிரஸ் கட்சியினர் தவித்துக் கொண்டிருப்பது ஒருபுறமுமாக இருந்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் என்ன செய்வார்களாம்? அசிங்கம் தான், ஆனால் ஜெயித்தவன் பக்கம் தாவுவது இந்தத் தேர்தல் முறையில் சகஜம்தான்!  பிஜேபியைக் குறை சொல்வதை விடுத்துத் தேர்தல் சீர்திருத்தங்களுக்காக இப்போதாவது குரல் கொடுக்க வேண்டியதுதானே! நேற்றைக்கு தொலைக்காட்சியில் கர்நாடக நிலவரம் குறித்து சதானந்த கவுடா ஒரு விஷயம் தெளிவாகச் சொன்னார்! இங்கே (இப்போது இருக்கிற தேர்தல் முறையில்) 51 equals to 100, 49 equals to 0 (இதுவரை அவர் சொன்னது)   என்றிருக்கிற வெஸ்ட்மின்ஸ்டர் தேர்தல்முறை திருத்தப் படாதவரை யாரைக் குறைசொல்லி என்ன செய்ய சொல்லுங்கள்!

சர்வகட்சிக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் 

மீண்டும் அதே கேள்விதான், 'சாதியா, வர்க்கமா?'. வர்க்கத்தை முதன்மைப்படுத்தும் கம்யூனிஸ்ட்கள் எப்படி 'பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை' மறுக்க முடியும்? மீண்டும் தமிழக அரசியலில் கம்யூனிஸ்ட்கள் தெரிந்தே செய்யும் தவறு இது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமரிசித்து விகடன் தளத்தில் ஒரு விமரிசனப்புலம்பலை ஆர்.சிவக்குமார் என்பவர் எழுதியிருப்பது இன்றைய தமிழக அரசியல் காமெடியாக 

இதுவிஷயமாக இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கேயும் சுவாசிக்கப்போறேங்க தளத்திலும் சமூகநீதி, சமநீதி என்ற குறிச்சொற்களை வைத்துப் பார்க்கலாம்.  
   
மீண்டும் சந்திப்போம். 
      

2 comments:

  1. கட்சி மாறி வந்தாலும் பாஜக காங்கிரஸ் போல இவர்களைப் பார்த்து பயப்படாது என்பதே என் எண்ணம். அடக்கி வைத்திருப்பார்கள். அதற்கு சகலவிதமான ஆயுதங்களையும் பாஜக பிரயோகிக்கும். காங்கு போல வளைந்து குனிந்த சமஉ களிடம் பணியமாட்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! A Party with a difference என்று ஆரம்பநாட்களில் கொண்டாடப்பட்ட பாரதீய ஜனதா கட்சி மெல்ல மெல்ல தானும் காங்கிரஸ் மாதிரியான இன்னொரு கட்சிதான் என்றாகிக் கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதானா என்பதை நண்பர் BK ராமச்சந்திரனிடம் ஒருமுறை கேட்டு என்ன சொல்கிறார் என்பதை எனக்கும் சொல்லுங்களேன்

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!