இட்லி வடை பொங்கல்! #33 அரசியல் இன்று!

நேற்றைக்கு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டது அகில இந்திய அளவில் தலைப்புச் செய்தியாக இருந்ததென்றால் தமிழகத்தில் மட்டும் எப்போதும்போலத் தலைகீழாக வைகோவுக்கு திமுக ஆட்சிக்காலத்தில் தொடரப் பட்ட தேசத்துரோக வழக்கில் குற்றவாளி என்று தீர்மானிக்கப் பட்டதும், ஓராண்டு சிறைத்தண்டனையும் 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட விஷயமும்தான் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியாக முக்கிய செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது. வைகோவைப் போல இங்கே ஊடகங்களும் தொடர்ந்து தவறுக்குமேல் தவறாகச் செய்து கொண்டிருப்பதில் நாம்தான் இவர்களைக் குறித்து என்ன செய்யவேண்டும் என்பதைத்தீர்மானிக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து பரப்பிவரும் பொய்களால் ஊடகங்கள் இங்கே நாம் என்ன முடிவெடுக்க வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இங்கே ஜன நாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படுகிற செய்தி ஊடகம், அந்த விஷயத்தில் வெறுமனே காசுக்கு கூவுகிற ஊடகங்கள் மட்டுமே என்றாகிப்போனதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், இல்லையா?  



இங்கே கரண் தாப்பர் முன்னாள் பொருளாதார ஆலோசகர் தீபக் நய்யாருடன் பட்ஜெட்டில் என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதை விவாதிக்கிறார். இது கபில் சிபல் நடத்தும் சேனல், அரசுக்கு எதிராகப் பேசுவதை சில நேரங்களில் நேரடியாகவும், பல நேரங்களில் நாசூக்காகவும் செய்கிற கலை தெரிந்த கரண் தாப்பர் தனக்குத்தோதான ஆட்களுடன் நடத்துகிற விவாதம் என்பதையும் மனதில்வைத்துக் கொண்டு, அரசியல், பொருளாதாரம் இவைகளில் ஆர்வம், நாட்டம் இருந்தால் பார்க்கப் பரிந்துரை செய்கிறேன். 45 நிமிடம். இதில் நரசிம்மராவ் பிரதமராக இருந்த நாட்களில் மன்மோகன் சிங் 1991 இல் தாக்கல் செய்த பட்ஜெட்டைப் பற்றி கரண் தாப்பர் சாமர்த்தியமாக இந்த பட்ஜெட்டோடு முடிச்சுப் போட்டுக் கேள்வி கேட்கிறார். ஆனால் அதே மன்மோகன் சிங் பிரதமராக இருந்த பத்தாண்டுகளில், முன்னால் மேற்கொண்ட சீர்திருத்தம், முயற்சிகள் எல்லாவற்றையும் பாழாக அடித்ததையோ, லட்சக்கணக்கான கோடிகளில் கண்முன்னால் ஊழல் நடந்ததைக் குறித்து ஒன்றுமே செய்ய முடியாத டம்மிப்பீசாக இருந்ததையோ பேசமாட்டார் என்பது கொஞ்சம் கவனித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டிய தமாஷா! 


ராகுல் காண்டி ராஜினாமா நாடகம் குறித்து இங்கே ஏகப்பட்ட விஷயங்களைச் சொல்லியாகிவிட்டது. எழுத்தாளர் ஜீவி ஒருவர் மட்டும்தான் இங்கே ராகுல் காண்டி மீது இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.  இங்கே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியராக இருந்த ,இப்போது Tne Print என்று தனிக்கடை நடத்திவரும் சேகர் குப்தா  ராகுல் காண்டியின் ராஜினாமா கடிதத்தைப் பற்றிப்  பேசுகிறார். 

சேகர் குப்தாவும் காசுக்கு கூவுகிற ஊடகக்காரர் தான்! ஆனாலும் மிகவும் நடுநிலையாக செய்தியை அணுகுகிற மாதிரி ட்ராமா போடுவதில் ஸ்பெஷலிஸ்ட்! என்ன தான் இவர்கள் கழுதையின் வெள்ளி மூக்குக்குச் சாயம் பூசி, இது குதிரைதான் என்று நம்பவைக்க முயற்சி செய்தாலும் இந்திரா வாரிசுகள் அரசியலில் சாயம் வெளுத்து வெறும் காமெடிப்பீசுகளாகக் குறுகிப் போய்விட்டதை மறைக்க முடியாதே! வேண்டுமானால் ராமசந்திர குகா மாதிரி, வாரிசுகள் எப்படித் தலைமுறைக்குத்தலைமுறை வீரியம் இழந்து கொண்டே வருகிறார்கள்  என்பதை இபின் கால்தூன் 600 வருடங்களுக்கு முன்னாலேயே சொல்லியிருக்கிறார் ரீதியில் சரித்திரம் அகழ்வாராய்ச்சி வேண்டுமானால் செய்து பார்க்கட்டுமே!

மீண்டும் சந்திப்போம்.



   
                    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!