இதர மொழிகளில் எப்படியோ, இங்கே தமிழ் இணையச் சூழலில் வெட்டி அக்கப்போர்கள், உள்ளூர் அரசியல், சினிமா செய்திகள், தமிழேண்டா பிரதாபங்கள் தாண்டி இன்னமும் நாம் வளரவே இல்லையோ என்ற எண்ணமும் ஏக்கமும் உங்களுக்கும் வருகிறதா? வந்தால் நீங்களும் என் இனமே! புதிய கல்விக் கொள்கை 2019 பற்றி நண்பர் விழியன் (எ) உமாநாத் செல்வன் பேசியதை ஒருதொகுப்பாக இங்கே சொல்லியிருந்த பதிவு, அதற்குண்டான சரியான கவனிப்பைப் பெறவில்லை. அதையே நடிகர் சூர்யா ஆவேசம், கோபம் என்று தலைப்பு வைத்து அதற்கு H ராஜா முதலானவர்கள் எதிர்வினை அதன் மீதான trolls, meemes என்று பதிவை மாற்றி எழுதியிருந்தால், ஏகப்பட்ட பார்வைகள் அதற்குக் கிடைத்திருக்கும் என்பது, இன்னமும் டீக்கடைகள், சலூன்களில் தினத்தந்தி படித்து உலகத்தைத் தெரிந்து கொள்கிற பழைய காலத்தை விட்டு நாம் வெளியே வரவே இல்லையோ என்கிற எண்ணம் அவ்வப்போது வந்துபோகிறது.
எது பொருளோ அதைப் பேசுவோம் என என்றைக்கு முன்வரப் போகிறோம்?
காங்கிரசின் காஸ்ட்லியான வக்கீல் அபிஷேக் மனு சிங்வி இன்றைக்கு அக்கப்போர் செய்திகளின் உச்சகட்டமாக ராகுல் காண்டி ராஜினாமாவும் பின்விளைவுகளும் இருப்பதைப் பற்றி, கரண் தாப்பருடன் பேசுகிறார், காங்கிரசின் இன்னொரு காசுக்கார வக்கீல் கபில் சிபல், அவருடைய மனைவி சேர்ந்து நடத்தும் இந்த திரங்கா டிவி, காங்கிரசிடமிருந்து வரும்படி தேத்த முடியாததாலோ என்னவோ, விரைவிலேயே கடையை சாத்தவிருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த விவாதம் (50 நிமிடங்கள்) கொஞ்சம் சுவாரசியமான வாக்குமூலங்களுடன் வருவதை நேரமிருந்தால் பாருங்கள்! .கர்நாடக குழப்பங்கள் பற்றி சபாநாயகருடைய வக்கீலாகவும் இருக்கிற அபிஷேக் மனு சிங்வி, காங்கிரசுடைய gameplan இன்னதுதான் என்பதை கோடிகாட்டிவிட்டுப் போவது இன்னொரு சுவாரசியம். காங்கிரஸ் வக்கீல்களுடைய ஜம்பம் எப்படிப் பட்டது என்பதை பர்க்கா தத் சொல்வதோடு சேர்த்துப் பாருங்களேன்!
எது பொருளோ அதைப் பேசுவோம் என என்றைக்கு முன்வரப் போகிறோம்?
இஸ்லாமிய பேங்கிங் நடத்துகிற மாதிரி, Islamic Monetary Advisory (IMA) என்ற பெயரில் பெங்களூரில் ஹலால் செய்யப்பட்ட மோசடியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஆயிரக் கணக்கான கோடிகளில் சேமிப்பை இழந்த விவகாரத்தை ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். இந்த மோசடியில் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படும் காங்கிரசின் முன்னாள் அமைச்சர் இந்நாள் சமஉ ரோஷன் பெய்க் நேற்று நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் கைது செய்யப்பட்டிருக்கிறார். எங்கு பார்த்தாலும் பிஜேபி மயமாகத் தெரிவதில் அரண்டுபோயிருக்கும் HD குமாரசாமி இந்த விஷயத்திலும் பிஜேபியைக் குறை சொல்லியிருக்கிறார்.
இந்த 11 நிமிட செய்தியின் முதற்பகுதி ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் குமாரசாமிக்கும் கர்நாடக பிஜேபிக்கும் வார்த்தைப்போர் தொடங்கியிருப்பதைப் பேசுகிறது. டொனால்ட் ட்ரம்ப் மாதிரியே நம்மூர் அரசியல் வாதிகளும் ட்வீட்டரிலேயே அக்கப்போரை நடத்தத் தொடங்கி விட்டார்கள் என்பது நல்லவிஷயமா? அல்லவா?
அக்கப்போர்களிலேயே நம்முடைய கவனத்தைத் தொலைத்து விடப்போகிறோமா என்ன?
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!