ஒரு கடிதம்! ஒரு கார்டூன்! எ வ வேலு பாணி பஜனை!

உடன்பிறப்பே என்று கருணாநிதி அந்தநாட்களில் முரசொலியில் கடிதம் எழுதினால் மெய் சிலிர்த்துப் படித்த ஒரு கூட்டத்தைப் பார்த்து வளர்ந்தவன் நான். இன்று கருணாநிதியும் இல்லை  மெய் சிலிர்த்த பழைய கூட்டமும் கரைந்துகொண்டே வருகிறது. காலி டப்பா தான் என்றாலும் பெருங்காயம் இருந்த வாசனை கொஞ்சம் தெரிவதுபோல அங்கங்கே கற்பனையாக கல்லறையில் இருந்து கருணாநிதி உடன்பிறப்புக்குக் கடிதம் எழுதுவதுபோல சில பகிர்வுகளில் பார்க்கும் போது கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்கிறது!


வாட்சாப்புல வந்ததுங்கோ...யார் வேண்டுமென்றாலும் சுட்டுக்கொள்ளலாம். என்று முகநூலில் பார்த்தது 
உடன் பிறப்பே,
இதுதான் தேர்தல் தொடங்கும் முன் நான் உனக்கு வரையும் இறுதி மடல்!
அப்பப்பா! இதுவரை நீ விபூதி அணிந்தும், குங்குமம் தீட்டியும், சந்தனச் சாற்றை நெற்றியில் குழைத்துப் பூசியும் பரம ஆத்திக வடிவில் வலம் வந்தது கண்டு நான் குலுங்கக் குலுங்க சிரித்து மகிழ்ந்தேன்!
வேடப் பொருத்தம் கன கச்சிதமாக அமைந்து என்னையே மிரள வைத்தது!
போதும் உடன் பிறப்பே, இனி களப் பணி ஆற்ற வேண்டிய நேரம் - வாக்குப் பதிவு நாள் நெருங்கி விட்ட நேரம்! உனக்குச் சில வரலாற்று விவரங்களை நினைவூட்ட விரும்புகிறேன்!
விரலில் இட்ட மையை அழிக்கப் பப்பாளிப் பாலைப் பயன்படுத்தலாம் என்ற உயரிய தொழில்நுட்பத்தை உலகுக்குக் கற்றுத் தந்தவன் அல்லவா நீ?!
'சமரன்' என்ற கம்யூனிஸ்ட் ஏட்டை 1960 களில் படித்தவர்கள் இதை அறிவர்! ஆனால் இன்று அதே கம்யூனிஸ்டுகள் நமது காலடியில் கிடப்பதை நீ அறிவாய்! ஆனால் பப்பாளிக்காய் இப்போதும் கிடைக்கும் என்பதை நீ மறந்திடாதே!
காலச் சுழற்சியில் தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் நீ நடத்திக் காட்டிய புதுமைகளை ஒரு புத்தகமாகவே போடலாம் உடன்பிறப்பே!
'விழுப்புரம் சின்னையா கணேசன்'- என்ற நீண்ட பெயரை வாக்காளர் பட்டியலில் கண்ணுற்றவுடன், உடனே ஓடோடிச் சென்று உரிய முறையில் ஒருவரை அழைத்து வந்து வாக்கைப் பதிய வைத்த சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவன் ஆயிற்றே நீ!
பிறகு சில மணித்துளிகள் கழித்து - அந்த 'விழுப்புரம் சின்னையா கணேசன் என்னும் வி.சி.கணேசன் - வேறு யாருமல்ல - எனது இளமைக் கால நண்பர் நடிகர் திலகம் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன்,வாக்குச் சாவடிக்கு வந்த போது தனது ஓட்டு பதியப் பட்டது கண்டு திகைத்தார்! வாக்குப் பதிவு அலுவலர்கள் திகைத்தனர்! தமிழகமே திகைத்தது!
அப்படிப்பட்ட மாபெரும் திறமைக்குச் சொந்தக்காரன் நீயாகத்தான் இருக்க முடியும் என நாடே வியந்தது!
ஆனால் சேஷன் என்ற ஆரிய ஆதிக்கவாதி, பாலக்காட்டுக் கணவாய் வழியே வந்த பார்ப்பனர், வாக்காளர் அடையாள அட்டை போன்ற சீர்திருத்தங்களைக் கொணர்ந்து - நாட்டின் முதல் குடிமகனாக அன்று இருந்த K R நாராயணனுக்கே முதல் அடையாள அட்டையைத் தந்து - உனது வேகத்துக்கு முட்டுக் கட்டை போட்டுவிட்டார்! அந்தப் பார்ப்பனீய சதியை இப்போது எண்ணும் போதும் நெஞ்சு விம்முகிறது!
'பர்தா போட்ட சிறுபான்மையினரின் மத உரிமை, வாக்காளர் புகைப்படத்தைக் கட்டாயம் ஆக்கினால் பறிபோகும்'- என்று நாமும் குரலெழுப்பினோம்! ஆனால் பாவி மனிதன் சேஷன் அதைத் தவிடு பொடி ஆக்கிவிட்டான்! எல்லாம் என் ஜாதக ராசி!
அப்புறம் நமது அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களில் நமக்கு நெருக்கமான ஒரு சிலரை வாக்குப் பதிவு மையங்களில், நமக்கு உதவுமாறு பணித்தோம்!
அவர்கள் வாக்காளர் உள்ளே நுழையும் போது உள்ளங்கையை விரித்து 5 விரல்களைக் காட்டி நமது சின்னத்தை நினைவூட்டினார்கள் - கூட்டணிக் கட்சியின் சின்னத்தை 5 விரல்களை இணைத்து நினைவூட்டினார்கள்...
இந்தக் குற்றச் சாட்டுகள் எல்லாம் நமது எதிரிகள் பல முறை நம் மீது சுமத்தி, நமக்குப் பழக்கப் பட்டதுதான் என்பதை மறந்திடாதே! துவண்டு போய் விடாதே!
அப்படிப் புகார் கூறியவர்களில் சிலர் இன்று நமது கூட்டணியிலேயே உள்ளார்கள் என்பது உனது மன உளைச்சலைக் குறைத்து உனக்கு ஆறுதலைத் தரும் என்பதை நான் அறிவேன்!
அதைவிட அடுத்த கட்டமாக வாக்கு எண்ணும் மையங்களிலும் நம் மீது புகார்கள் வந்தன! ஒரு சில அரசு ஊழியர்கள் - நமக்கு நெருக்கமானவர்கள் - வாக்கு எண்ணும் போது நமக்கு உதவியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன!
அதாவது 50 - 50 ஆக வோட்டுச் சீட்டுகளைக் கட்டி எண்ணும்போது, நமக்குக் கட்டும் போது 45 முதல் 49 வரை ஒரு சில கட்டுகளைக் கட்டி அவற்றை 50 என்று கணக்கிட்டதாகவும், எதிர்க்கட்சி சின்னத்தில் பதிவான வோட்டுச் சீட்டுகளை 55 வரை கட்டிப்போட்டு 50 என்று எண்ணியதாகவும் புகார்கள் எழுந்தன!
இதற்கும் நாம் 'வோட்டு எந்திரம் வேண்டாம் - பழையபடி வோட்டுச் சீட்டு முறையே வேண்டும்'- என்று கொடி பிடிப்பதற்கும் நீயாக முடிச்சுப் போட்டுக் கொள்ளாதே!
இப்படிப் பட்ட பல தில்லுமுல்லுப் புகார்களுக்கு ஆளாகி, தியாகத் தழும்பேறிய இயக்கம் நமது இயக்கம் என்பதை நீ மறந்திடலாகாது என்பதற்கே இவற்றை நினைவூட்டினேன்!
வாக்காளர் பட்டியலில் இறந்தவர் யார், இருப்பவர் யார் என்ற விவரங்களை நீ விரல் நுனியில் வைத்திருப்பாய் என்பதை நான் மட்டுமல்ல தமிழகமே அறியும்!
எனவே 'நாம் தென்றலைத் தீண்டியவர்கள் அல்ல - தீயைத் தாண்டியவர்கள்' என்பதை நினைவில் நிறுத்தி...
பரப்புரைப் பணியை நிறைவு செய்து, களப்பணி ஆற்றிடப் புறப்படு உடன்பிறப்பே!
கல்லறையில் இருந்து
மு.க
ஆனால் இன்றையநாட்கள் பழைய நாட்களைப் போல ஒன்றும் இல்லாததற்கெல்லாம் மெய் சிலிர்த்துப் புளகாங்கிதம் அடைந்த நாட்கள் அல்ல.

அடடே!மதி கார்டூனில் சொல்வதுபோல கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்கத்  தெரிந்த இளைய தலைமுறை பெரும்பான்மையாக உள்ள சமூகம் இன்று!

கடிதம் எழுதிப் பயனில்லை! எ வ வேலு  பாணியில் பஜனை செய்வோம் (கருணாநிதி கல்லறையில் பஜனை செய்த கதை தெரியுமில்லையா)  என்று சிலர் கிளம்பிவிட்டதாக இங்கே சொல்கிறார்கள்  

மீண்டும் சந்திப்போம்!

  

2 comments:

  1. எதிர்காலமா? பாவம் பிள்ளைகள்... எந்தக் கொள்ளி நல்லக் கொள்ளி என்று பெற்றோர் திகைத்து நின்றிருப்பது தெரியாமல் சொல்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எந்தக் கொள்ளியை எப்படிப் பயன்படுத்துவது என்ற வித்தையை வாக்காளர்கள் கற்றுக்கொண்டாக வேண்டுமே ஸ்ரீராம்! பயந்தால் எப்படி?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!