தேர்தல் முடிஞ்சாத்தான் என்ன? பேச விஷயமா இல்லை?

நண்பர் திண்டுக்கல் தனபாலன் தன்னுடைய பதிவில் உண்மையை வாங்கிப் பொய்களை விற்று உருப்பட வாருங்கள் என்ற சிவாஜி கணேசன் படப்பாடலை வைத்து, திருக்குறளோடு கலந்து ஒரு புதுஉரையாக எழுதுவதைக் கவனித்திருக்கிறீர்களா?


அதைப் படிக்கும்போது எனக்கே பிலாத்து மன்னனுக்கு ஏற்பட்ட குழப்பம் மாதிரி உண்மையா? யாருடைய உண்மை? என்னுடையதா? உங்களுடையதா? என்று பரிசேயர்களிடம் கேட்ட மாதிரி! ஜிவ்வென்று குழப்பம் தான்,வேறென்ன வருமென்கிறீர்கள்?    உண்மை எது என்பதற்கு முன்னால், எவருடைய பார்வையிலிருந்து என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும். உண்மையை வாங்குவது எப்படி, அதை ஒளித்துவைப்பது எப்படி மற்றும்  குவிந்துகிடக்கிற பொய்களை எல்லாம் விற்பது எப்படி என்பதை சன் குடும்பத்தாரிடம் இருந்துதான் பாடம் கேட்க வேண்டுமோ? 

KDbrothers தொழில்ரகசியத்தை அவ்வளவு எளிதாகக் கற்றுக் கொடுத்து விடமாட்டார்களே! ஆனந்த விகடன் எதற்கு இருக்கிறதாம்? இந்த ஒரு செய்தியைப் பாருங்கள்!      ஒரு பொய்யை எப்படி சிங்காரித்து உண்மை போலவே உலவவிடுவது என்பதற்கு குன்சாவாக ஒரு ஐடியா கிடைக்கிறதா இல்லையா? 


ரங்கராஜ் பாண்டே அவர் பங்குக்கு ஊடகப்பணியைச் செய்கிறார்! வேறென்ன, குழப்புவதுதான்!   வீடியோவில் அவர்  பேசுவதைக் காதில் வாங்கி கொண்டே  யூட்யூப் தளத்தில் வந்திருந்த பின்னூட்டங்கள் சுவாரசியமாக இருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன். 


உலகமகாக் குழப்பம்! வேறு யார்? பரட்டைதான்! ஆனால் முகநூலில் குழம்பாமல் அலசிக் காயப்போட்ட ஒருபகிர்வைப் பார்த்தேன். பத்தில் எட்டாவதாக இசுடாலின் பற்றியும் கூட பாசிட்டிவாகச் சொல்கிறார் பாருங்கள்!    

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் தொடக்கம் முதல் இறுதிவரை பற்பல சுவையான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிந்தது. நகைச்சுவை துயரம் கசப்பு வியப்பு என அவற்றுக்குப் பல்சுவைகள் இருந்தாலும் சிலவற்றை மறக்கவே முடியாது. அவற்றில் என்னை ஈர்த்த முதற்பத்து கீழே :-
1. இத்தேர்தலின் மிகப்பெரிய நகைச்சுவை இராகுல்காந்தியின் உரைக்குக் கேரளத்தில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புத்தான். இரண்டு சேட்டன்களும் மொழிபெயர்க்கத் தெரியாமல் “இவர் என்னவோ சொல்றாரு... அப்படி என்னதான் சொல்றாரு...?” என்று மொழி தெரியாதவரைப் போலவே இராகுலைப் பார்த்த காணொளியை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. இந்தச் சொதப்பல்களைப் பொறுத்துக்கொண்டு இராகுல்காந்தி பெருந்தன்மையாக நடந்துகொண்டதும் மனத்தைக் கவர்ந்தது.
2. தங்கபாலு மொழிபெயர்ப்பினைப் பார்த்ததும் அவர் இட்டுக்கட்டி அடிக்கிறார் என்று விளங்கிக்கொண்டேன். அவர் தவறாக மொழிபெயர்த்தது ஒருபுறம் என்றாலும் இராகுல் பேசும்போது “அப்புறங் சண்முகமணி ?” என்பதைப்போலவே கூர்ந்து கவனித்ததுதான் விழுந்து புரண்டு சிரி வகைக்குள் வந்துவிட்டது. அதனை முன்வைத்து உலவிய நகைப்பழிகைகள் செம்மை வகை. எடுத்துக்காட்டு : I love tamil music = நான் தமிழிசையைக் காதலிக்கிறேன்.
3. மன்சூர் அலிகான் திண்டுக்கல்லில் தேநீர் ஆற்றி காய்கறி விற்று கரும்புச்சாறு பிழிந்து பரப்புரை முறைகளில் பளபளப்பேற்றினார். இவர் நகைச்சுவைக்காகச் செய்கிறாரோ என்று தொடக்கத்தில் ஐயம் இருந்தது. ஆனால், அவர் அந்தப் பரப்புரை உத்தியோடு ஊன் உடல் உள்ளம் அனைத்தும் ஒன்றிப்போய்த்தான் செய்கிறார் என்பது தெரிந்தது. அவருடைய அணுகுமுறைக்காக அத்தொகுதியில் நல்ல வாக்குகள் கிடைக்கலாம்.
4. நாம் தமிழர் கட்சியின் வடசென்னை வேட்பாளரான காளியம்மாள் பொருட்படுத்தத்தக்கவராகத் தெரிந்தார். அவருடைய எளிமையான பேச்சும் ஈர்த்தது. மக்களில் ஒருவர் மக்களவைக்குச் செல்லவேண்டும் என்றால் அவரைப் போன்றவர்கள் வெல்ல வேண்டும்தான். ஆனால், நம் மக்கள் தம்மைப் போலுள்ளவரைத் தலைமைக்கு அனுப்பமாட்டார்கள். நம் தலைவிதி அப்படி !
5. ஆங்காங்கே கைப்பற்றப்பட்ட கோடிகள் இந்தத் தேர்தலைப் பெரிய கட்சிகள் எவ்வாறு கையாள்கின்றன என்பதை விளக்கின. சில்லறைக் கட்டுகளாக அடுக்கி ஒவ்வோர் பகுதிக்குமென்று புத்தகப் பொட்டணம்போல் ஆக்கப்பட்ட சேர்ப்பனை முறை. கூட்டணி முதற்கொண்டு பரப்புரை வரைக்கும் பணம்தான் இங்கே இயக்குவிசை. எதிர்கட்சியினர் மட்டுமே இவ்வகைச் சோதனைகளுக்கு ஆட்படுத்தப்பட்டதும் என் தந்தை குதிருக்குள் இல்லை என்று தெளிவாகச் சொன்னது.
6. பரிசுப்பெட்டி வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அப்பெயரைக் கொண்டவர்களே தன்னவா வேட்பாளர்களாக இறக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவர்க்கும் சோறவிப்பான் சின்னத்தினையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. அது எப்படி என்று தெரியவில்லை. தன்னவாவினர் சின்னத்தையும் அவாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதோ என்னவோ !
7. இந்தத் தேர்தலில் இடைப்பாடி பழனிச்சாமி தரையில் இறங்கி நடந்து பரப்புரை வேலை செய்தார் என்று சொல்லலாம். வெய்யில் பாராமல் வண்டித் திறப்பின் வழியே தென்பட்ட ஒவ்வொருவரையும் கும்பிட்டார். முதலமைச்சர் என்பதனைவிடவும் அவரை உள்ளூர் அரசியல்வாதியாகவே பார்த்த மக்கள் எவ்விதப் பதற்றமும் இல்லாமல் எதிர்வினையாற்றினர். வாழைப் பழங்களுக்கும் அவை தம் கைக்கு மாறிய சில நொடிகளுக்கும் வட்டி போட்டு காசு கொடுத்தார் என்று வரலாறு கூறும்.
8. இந்தத் தேர்தலில் தமிழ்நாடெங்கும் சுற்றியலைந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலினைத்தான் சொல்ல வேண்டும். கடும் உழைப்பு. தனியொருவராக அவரிடம் காணப்பட்ட உள்ளத் திண்மை அவர் பழையவர் அல்லர் என்று காட்டிற்று. உடனடி மேடைப் பேச்சினில் சில விடுபாடுகள் தோன்றும்தான். தூய தமிழினில் பேசுவதை விடுத்து இயல்பான தமிழில் பேசினாலும் மக்கள் செவிமடுப்பார்கள். நம்பத் தகுந்த அரசியல் தலைவர் என்ற மிடுக்கு வந்திருக்கிறது அவர்க்கு.
9. கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரைகளும் கூட்டங்களும் பேசப்பட்டன. அவர்க்குக் கைவிளக்குச் சின்னம் கிடைத்தது நல்ல திருப்பம்தான். பரப்புரைக் காணொளிகளில் விழிகளை உருட்டி ஏற்ற இறக்கத்தோடு பேசி நன்கு நடித்திருந்தார். மக்கள் நீதி மய்யத்திற்கு நல்ல அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவர்மீது பெரிதாக எதிர்மறைப் பார்வை எதுவும் வளரவில்லை. இம்முறை நிறையவே கற்றிருப்பார். சொல்லிக்கொள்ளுமளவுக்கு வாக்குகளைப் பெறுவார் என்றே நண்பர்கள் கூறுகின்றனர்.
10. இந்தத் தேர்தலில் எல்லா ஊர்களிலும் மக்கள் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். யாரை எங்கே வைக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்திருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் வாக்குப் பதிவு விழுக்காடு எழுபதைத் தாண்டியிருக்கிறது. வாக்குப் பதிவு நாளன்று கண்ட முகங்கள் ஒவ்வொன்றிலும் பொறுப்புணர்வு கூடியிருந்ததைப் பார்த்தோம். பெட்டியைத் திறக்கும் நாளில் அந்தப் பொறுப்புணர்வின் விடை தெரிந்துவிடும் என்று முகநூலில் அவதானிக்கிறார் மகுடேஸ்வரன் கோவிந்தராஜன். 
மே 23 வரை பொறுத்திருந்துதான் பார்க்கலாமே!  

5 comments:

  1. // ஆனால், நம் மக்கள் தம்மைப் போலுள்ளவரைத் தலைமைக்கு அனுப்பமாட்டார்கள். நம் தலைவிதி அப்படி !

    உண்மை. சரியாகச் சொல்லி இருக்கிறார்.

    // நம்பத் தகுந்த அரசியல் தலைவர் என்ற மிடுக்கு வந்திருக்கிறது அவர்க்கு.//

    நகைச்சுவையையும் கலந்து எழுதி இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. தலைமைக்கு வருவதென்பது ஒரு பிரமிடின் உச்சிக்கு வருவதுபோல. எல்லோராலும் முடியாதென்பது தலைவிதியால் அல்ல limitation அவ்வளவுதான்! உச்சிக்கு வருகிறவர்கள் தங்களுடைய மொத்த வித்தையையும் பயன்படுத்தி வாரிசுகளை அங்கே திணித்துவிடுகிறார்கள் என்பது அடுத்த விஷயம்!

      ஒரு கட்சித்தலைவராக இசுடாலின் தன்னால் முடிந்ததை இந்தத் தேர்தலில் செய்திருக்கிறார். வாரிசு உதயநிதி கூட ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தாலும் star attraction இருந்ததே! அதை ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும் ஸ்ரீராம்!

      Delete
  2. அ.சையது அபுதாஹிர் நீங்க விகடனில் குறிப்பிட்டுள்ள கட்டுரையை எழுதியவர் இவர். நான் கடந்த சில வாரங்களாக விகடனில் எழுதியவர் யார்? அவர் பின்புலம் என்ன? என்பதனைப் பற்றி அலசிக் கொண்டிருக்கின்றேன். அவர்கள் ஃபேஸ்புக்கில் அவர்களைப் பற்றி பின்புலத்தை ஓரளவு நம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜோதிஜி! ஆனந்தவிகடனில் இவர் மட்டுமல்ல அனேகமாக எழுதுகிற எல்லோருமே அந்தநாளைய தராசு ஷ்யாமை மானசீக குருவாக நினைத்து, ஆதாயம் வருகிற வழிபார்த்து எழுதுகிறவர்கள்தான்!

      Delete
  3. வாசித்து விட்டேன். வெற்றி என்று நினைப்பவர்களுக்கும் நினைப்பதை உரக்கச் சொல்லி மகிழ முடியாத நிலையை மக்கள் ஏற்படுத்தி விட்டது என்னவோ நிஜம்!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!