காங்கிரசை இன்னமும் சகித்துக்கொள்ளப் போகிறோமா?

உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 2018 இல் வழங்கப் பட்ட ரஃபேல் விமான பேரம் விவகாரம் மீதான தீர்ப்பு மீதான சீராய்வு (review) மனு மீது இன்று ஒரு முடிவை மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு பெஞ்ச் அளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி,  ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்  தாக்கல் செய்தனர்.இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த மாதம் 14-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்ப வழங்கப்பட்டது. அதில், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் தொடர்பாக நாளேடுகளில் வெளியான ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் மத்திய அரசின் ஆட்சேபனை மனுவை தள்ளுபடி செய்கிறோம். விரைவில் விசாரணை தொடங்கும் " எனத் தீர்ப்பளித்தனர். உடனே காங்கிரசின் சுர்ஜீவாலா ட்வீட்டரிலும் ராகுல் காண்டி பத்திரிகை பேட்டிகளிலும் என்னமோ நீதிமன்றமே நரேந்திரமோடியைத் திருடர் என்று சொல்லி விட்டமாதிரி அப்படியொரு ஆரவாரமான  தம்பட்டமோ தம்பட்டம்!

சுர்ஜீவாலா  பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் " பிரதமர் மோடி தன்னால் முடிந்தவரை பொய்களைப் பேசி அரசை நடத்திக் கொள்ளலாம். ஆனால், விரைவாகவோ அல்லது தாமதமாகவோ உண்மை வெளியாவது நிச்சயம். ரஃபேல் போர் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் எலும்புகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்.இப்போது எந்தவிதமான ரகசிய காப்புச் சட்டத்தையும் பின்னாலும் மறைக்க முடியாது. உச்ச நீதிமன்றம் சட்டத்தின் கொள்கையை சரியான நேரத்தில் உறுதி செய்துள்ளது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் விவகாரங்களை வெளிப்படுத்திய சில பத்திரிகையாளர்கள், பத்திரிகைகளுக்கு எதிராக ரகசிய காப்புச் சட்டத்தை பயன்படுத்துவோம் என்று மோடி அரசு அச்சுறுத்தியது. நீங்கள் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும், கவலைப்படாதீர்கள் மோடிஜி, ரஃபேல் வழக்கில் விசாரணை நடக்கப்போகிறது " எனத் துள்ளிக் குதித்திருக்கிறார். .


கோயபல்சிடமிருந்து கற்றுக் கொண்டார்களோ. திமுக கூட்டாளிகளிடமிருந்து கற்றுக் கொண்டார்களோ தெரியாது, நீதிமன்றம் ஒரு IA (interlocutary application) மீது சொன்ன ஒரு முடிவை மனம் போன போக்கில் திரித்துச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் நீதிமன்ற அவமதிப்பில் வராதுபோலிருக்கிறது!


பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிஜேபியின் தலைமை அலுவலகச் செயலாளருமாகிய திருமதி நிர்மலா சீதாராமன், இன்று நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதென்ன, காங்கிரஸ் கட்சி திரித்ததென்ன என்பதைப் பற்றி விரிவாகப் பத்திரிகையாளர்களிடம் விளக்குவதைக் கொஞ்சம் கவனமாகக் கேளுங்கள்.

காங்கிரஸ் கட்சி இந்த தேசத்துக்கு செய்துவரும் மிகப் பெரிய துரோகம், இவர்கள் பலவீனப்படுகிற தருணங்களில், இந்த தேசத்தையும் சேர்த்தே பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறார்கள் என்பதுதான். அரசு இயந்திரம்,  நிர்வாகம், நாடாளுமன்ற நடைமுறைகள், நீதித்துறை, ஊடகங்கள்  என்று எல்லாவற்றையுமே காங்கிரஸ் தொடர்ந்து பலவீனப் படுத்திக் கொண்டு வருகிறது. குற்றுயிரும், குலை உயிருமாக இருந்து கொண்டே, இந்திய ஜனநாயகம் அவ்வப்போது சில நம்பிக்கைக் கீற்றுக்களையும் தந்து கொண்டிருக்கிறது என்பது ஒன்று தான் இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்று இந்தப்பக்கங்களில் எழுதியதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்த வேண்டுமா? 


சீனாவை எந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறோம்?

   

2 comments:

 1. இருக்கிறது இரண்டே இரண்டு அகில இந்திய கட்சிகள். தமிழகத்திற்கு திமுக--அதிமுக போல அகில இந்தியாவுக்கு இவர்கள்.
  இவர் மாற்றி அவர், அவர் மாற்றி இவர் என்று ஆட்சிப் பந்தை இவர்கள் இருவர்கள் தான் ஆடிக் கொண்டிருக்கப் போகிறார்கள்.
  மூன்றாவதாக யாரும் வரப் போவதில்லை. வர முயற்சித்தாலும் இவர்கள் இருவரும் சேர்ந்து அவர்களை வரவிடாமல் செய்து விடுவார்கள்.
  அந்த விஷயத்தில் இந்த இரண்டு பேரும் தனித்தனி கட்சிகளாக வெளிக்குத் தோற்றமளித்தாலும் இன்னொரு கட்சியை அகில இந்திய அளவில் வளர அனுமதிக்கப் போவதில்லை என்ற விஷயத்தில் கூட்டணி சேர்ந்தவர்கள்.

  மாநிலக் கட்சிகளும் இந்த இரண்டு பெரியண்ணன் கட்சிகளில் தங்களை அடக்கிக் கொள்ளவே அடக்கமாக விரும்புகிறார்கள். இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கமாகி விட்டார்கள்.

  வாக்காளர்கள் வேறு என்ன தான் செய்வார்கள்.. இந்த இரண்டு வலதுசாரிகளுக்குள் இவர் விட்டால் அவர்; அவர் விட்டால் இவர் தான் வருங்காலத்தில்.

  ReplyDelete
  Replies
  1. ஜீவி சார்! உங்கள் அனுமானத்தின் மீது எழும் கேள்விகளாக .......

   காங்கிரசுக்கு இன்னமும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வாக்களிப்பவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தால் அது அகில இந்தியக் கட்சி ஆகிவிடுமா? கட்சி அமைப்போ தொண்டர்களோ நிர்வாகிகளோ இல்லாத அல்லது மேலிட நியமனத்தில் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிற ஒரு கட்சிக்கு அகில இந்தியப்பார்வை என்று ஒன்று இருக்கிறதா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் இடதுசாரித் தன்மை உள்ளதாகச் சொல்லப்பட்டது. இப்போதும் தான் பல இடங்களில் ஒட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற நிலையில் காங்கிரசின் இடதுசாரி வேடம் களைந்து விட்டதா?

   ஆரம்பத்திலிருந்தே பிஜேபி ஒரு வட இந்தியக் கட்சியாக மட்டுமே அறியப்பட்டது. தென்மாநிலங்களில் இன்னமும் வலுவான வாக்குவங்கியை உருவாக்க முடியவில்லை என்றாலுமே கூட அமைப்புரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது ஆயிரம் குறை சொன்னாலும் கூட பிஜேபிக்கு ஒரு தேசியப்பார்வை, தேசிய சிந்தனை இருக்கிறது. அதைக் குற்றம் சொல்லியே இங்கே மாநில உணர்வுகள், பிரச்சினைகள் தூண்டப்பட்டு ஒரு எதிர்ப்பு மனோபாவத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிச் செய்பவர்களுமே, பிஜேபி ஒரு வலதுசாரிக் கட்சி என்பதால் எதிர்ப்பு நிலையை மேற்கொள்பவர்கள் அல்ல.

   கடைசியாக இங்கே இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்கிறவர்களே தங்களுடைய இடதுசாரித் தனத்தை மறந்து ஒதுக்கிவைத்திருப்பதில், வாக்காளர்களுக்கு வேறு சாய்ஸ் ஏதாவது விட்டு வைத்திருக்கிறார்களா?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!