தொடர்புடைய முந்தைய பதிவு ராதாரவி நீக்கம்! திமுக தூய்மையாகிவிட்டதா என்ன?
நடிகவேள் எம் ஆர் ராதா அந்தநாட்களில் எழுப்பிய கலகக்குரல் இன்றைக்கும் கொண்டாடப்படுவதற்கு தனித்த காரணங்கள் சில உண்டு. சினிமாவில் இருந்து கொண்டே சினிமாக்காரனை நம்பி மயங்காதே என்று சொல்கிற துணிச்சல் அவருக்கு இருந்தது. நடப்பு நிலவரங்களை, அரசியல் விஷயங்களைப் போகிறபோக்கில் ஒரு கோடிகாட்டிவிட்டு பகடி செய்வதில் அவருக்கிருந்த திறமையில், வக்கீலுக்குப் படித்த மகன் (ராதா)ரவியிடத்தில் நூற்றில் ஒரு பங்குகூட இல்லை. ஆனாலும் ஏட்டிக்குப் போட்டியாக, இரட்டை அர்த்தம் தொனிக்கிற சங்கதிகளாகப் பொதுவெளியில் தொடர்ந்து பேசியே தன்னை லைம் லைட்டில் தக்கவைத்துக் கொண்டார் என்பதில் அவர் சாமர்த்தியம் ஒன்றுமில்லை. திராவிட இயக்கத்தின் வளர்ச்சியே அப்படி அப்பட்டமான ஆபாசப்பேச்சில் தான் இருந்தது என்பதும் அதற்கிடம் கொடுத்து ஆரவாரம் செய்து ஆதரிக்கவும் ஜனங்களில் ஒருபகுதியினர் தயாராக இருந்ததும்தான் காரணம்! இதை இப்போதாவது புரிந்துகொள்ள முடிந்தால், சமூகத்துக்கு இனி விடிவுகாலம்தான்! ராதாரவியைக் கழற்றி விட்டதும் கூட நயன்தாராவுக்காக மட்டுமே இல்லை, வேறு சில அரசியல் காரணங்களும் இருக்கின்றன என்ற தகவலும் உண்டு.
வலையெழுத்து, பத்தி எழுத்து இவைகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் திரு R P ராஜநாயஹம். முகநூலில் தான் முன்பு ஆபாசப்பேச்சின் வெற்றிகொண்டான் குறித்து எழுதிய வலைப்பதிவு ஒன்றைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரிடம் அனுமதி பெறவில்லை என்றாலும், சொன்னால் ஏற்றுக்கொள்வார் என்கிற நம்பிக்கையில், அவருக்கு நன்றி தெரிவித்து இங்கே பகிர்கிறேன். இது அவருடைய வலைப்பதிவில் 2009 டிசம்பரில் எழுதியது.
வெற்றி கொண்டான்
“LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS
திருநாவுக்கரசரின் குற்ற உணர்வு இன்னும் தீர்ந்து தெளிந்த பாடில்லை . தவிக்கிறார்...
தத்தளிக்கிறார் ..தக்காளி விக்கிறார்... அவருடைய குலதெய்வம் எம்ஜியார் ஆதியில் இருந்த
கட்சி காங்கிரஸ் என்று கண்டுபிடித்து,அதில் இணைந்ததில் மிகவும் சந்தோசப் படுவதாக,
பெருமைப்படுவதாக சொல்லிவிட்டார்.
1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண்
என்று இருந்தவர் தான் .ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம் ,ஈடுபாடு,நோக்கம் ஏதும்
கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார் . அவருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர
ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது . மது,சிகரட்
கிடையாது .அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி
பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம் . எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள
விருப்பமில்லாததால் மறுத்து விட்டார் . பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக
நாடகத்தில் நடித்தாராம்.அதன் பின்னர் வி .சி .கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து
பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி
கணேசன் ஆனார்.
எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம் நினைவிற்கு வந்தது.
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய
தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள்
உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ
உளறினார். உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்
கொண்டது இப்படி ! " குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான்! காந்தியும்
நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா! இவன்
பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே! நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே
" ஏலே ! நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு
கேட்கிறேன் .அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான் .
குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான் !"
(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது
உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)
குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து
வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும் .
எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார் .கருணாநிதி தன் பதிலாக " ஆம் .
டெல்லியில் மன்றாடிய பரம்பரை !"என்றார் .
அப்போது திமுக மேடைகளில் வெற்றி கொண்டான் செய்த கலாட்டா -" நான் பக்தவத்சலத்தை
பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார் .
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''
" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன் .
பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் " திடீர்னு குல்லாக்காரன் 'நான்
முதலியார் . பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா என்ன செய்யறது ?"
தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை
குரங்கு போலவே வரைவார்கள் .ஜெயந்தி நடராஜனின் தாத்தா.
மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த
திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்! நீ கலைஞரை ரொம்ப திட்டுற .
மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை . திமுக வை எம்ஜியாரை
வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே
என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே !
கடவுள் : மோகன் !நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே .
மோகன் : முடியாது கடவுளே !
கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே ?
மோகன் : ஆமா கடவுளே !
கடவுள் : திட்டுவ நீ ?
மோகன் : ஆமா திட்டுவேன் .
கடவுள் : சரி நீ ஏறு ப்ளேன்னுலே !!
எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி
வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய
உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம் . அந்த கோர்ட்டுக்கு எதிரே
ஒரு ஓட்டல் .நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க . இன்னைக்குப்
போயி கேளுங்களேன் . அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் .
" இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "
( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே
உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான்.
ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம் !)
நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே .
நல்லா நெடு ,நெடுன்னு , கொழு ,கொழுன்னு .. அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது
பேர் சாப்பிட்டிருக்கலாம்.விட்டுப்புட்டோம்.
திருச்சி திமுக கூட்டமொன்றில் சில வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே! உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான் உன் தலைவியோட ' வேதா நிலையம் '!
எழுத்தில் கொண்டுவர முடிந்த ஆபாசப்பேச்சு கொஞ்சம் தான்! மேடையில் வெற்றிகொண்டானும் தீப்பொறி ஆறுமுகமும் செய்கிற கொனஷ்டைகளோடு சேர்த்துக் கேட்டால் ஆபாசம் உச்சத்தைத் தொடும்.
எஸ் எஸ் சந்திரன் என்ற நகைச்சுவை நடிகனை நினைவிருக்கிறதா?
வெற்றிகொண்டான் தீப்பொறி ஆறுமுகங்களின் கொஞ்சம் மென்மையான சினிமா வெர்ஷன் (சென்சார் இருந்ததால்!)
திராவிடமாயையில் கொள்கை கோட்பாடெல்லாம் வெறும் சொல் அலங்காரம் மட்டும் தான்! ஆபாசப் பேச்சு முழக்கத்திலேயே முன்னுக்கு வந்தவை திராவிட கழகம், திமு கழகம் எல்லாம்!